ரில்வின் சில்வாவின் கைப்பொம்மையாக செயற்படும் அநுர : உதய கம்மன்பில குற்றச்சாட்டு
ரில்வின் சில்வாவின் கட்டளைகளுக்கு அமைய ஜனாதிபதி செயற்படுவதாகவும் மக்கள் ஜனாதிபதியாக அநுரவை தெரிவு செய்துள்ளார்களே தவிர ரில்வின் சில்வாவை அல்ல என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாடாளுமன்றத்தில் மூன்று இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதால் ஜனாதிபதி தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார். மக்களின் கருத்துக்கும், எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பதில்லை.
நீதிபதிகளின் பதவிக்காலம்
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் ஆலோசனைகள் மற்றும் கட்டளைகளுக்கு அமைவாகவே ஜனாதிபதி செயற்படுகிறார்.

நாட்டு மக்கள் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்கவை தெரிவு செய்துள்ளார்களே தவிர ரில்வின் சில்வாவை அல்ல என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.
நீதிபதிகளின் பதவிக்காலம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகமும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள பின்னணியில் அவற்றை பொருட்படுத்தாமல் தனது தீர்மானத்தில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.
நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அப்பாற்பட்டு பெரும்பான்மை ஆதரவுடன் பதவியில் இருந்தார். இறுதியில் வீதியில் இறங்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தது. இறுதியில் அறிவிக்காமலே நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஆகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களும் நெருக்கடிக்குள்ளாகின. ஆகவே கடந்த கால சம்பவங்களை ஜனாதிபதி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |