ராஜபக்சர்களால் அதிருப்தி - மைத்திரி தரப்பு எடுத்துள்ள தீர்மானம்
ஆளும் கட்சியின் எதிர்காலம் குறித்து அரச தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோருடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் சுதந்திரக் கட்சி பிரதான கட்சியாக காணப்படுகின்ற நிலையில், கூட்டணி அமைக்கும் போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பல விடயங்கள் முறையாக செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ரோஹண லக்ஸ்மன் பியதாஸ இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''சிறிலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணி அரசாங்கத்தில் சுதந்திர கட்சி பிரதான பங்காளி கட்சியாக உள்ளது. அரச தலைவர் மற்றும் பொதுத்தேர்தலில் சுதந்திரக் கட்சி அரசியல் ரீதியில் மாற்றுத் தீர்மானத்தை முன்னெடுத்திருந்தால் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றிருக்காது.
அரசாங்கத்தின் நிர்வாகத்தின் மீது நாட்டு மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள். அரசாங்கத்தின் தீர்மானங்கள் மக்களுக்கு சாதகமாக அமைவதில்லை. மாறாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் மீதான மக்களின் வெறுப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளதே தவிர குறைவடையவில்லை.
அரசாங்கத்தில் இருந்து சுதந்திரக் கட்சி வெளியேறுவது சிறந்தது என சுதந்திரக் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களும், சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்கள்.
முன்வைக்கப்பட்ட யோசனைகளை பரிசீலனை செய்ய மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. பொதுத்தேர்தல் காலத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னிலைப்படுத்தி பல்வேறு கட்சிளை ஒன்றிணைத்து கூட்டணி அமைக்கப்பட்டது. கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இதுவரையில் முறையாக செயற்படுத்தப்படவில்லை.
சிறிலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளை புறக்கணிக்கும் செயற்பாட்டையே பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் முன்னெடுக்கிறார்கள். வெறுக்கத்தக்க பேச்சுக்கள் கூட்டணிக்குள் தோற்றம் பெற்றுள்ள பல பிரச்சினைகளுக்க மூல காரணியாக உள்ளது.
சுதந்திர கட்சிக்கு எதிரான சேறு பூசல்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன. அரச தலைவர்களின் ஆதரவுடன் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகிறதா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.