இலங்கை கிரிக்கெட் தடை தொடர்பில் அம்பலமாகும் பகீர் தகவல்!
இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை செய்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்தது இலங்கை கிரிக்கெட் சபை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ”எதிர்க்கட்சியினர் கிரிக்கெட் தொடர்பாக ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்தது என அரச தரப்பினர் குற்றம் சுமத்தி வந்தனர்.
ஆனால் இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை செய்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்தது இலங்கை கிரிக்கெட் சபையாகும்.
சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பிய கடிதம்
கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி பிரதான 5 குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, அரசாங்கம் கிரிக்கெட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த பொய் குற்றச்சாட்டுக்களே தடைக்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் முதலாவது குற்றச்சாட்டு, கிரிக்கெட் போட்டிகளுக்காக விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தின் தலையீடு, இரண்டாவது குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளின் சம்பள விபரத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கோருவது, மூன்றாவது குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதியின்றி இலங்கை பிரீமியர் லீக்கை நடத்த முடியுமாக இருப்பது, நான்காவது குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான புதிய யாப்பு அமைப்பதாக கூறி விளையாட்டுத் துறை அமைச்சர் மேற்கொள்ளும் தலையீடு, ஐந்தாவது குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்காய்வு அறிக்கை வரைபை வெளியிட்டதன் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு, மற்றும் மேலதிக குற்றச்சாட்டாக தேசிய விளையாட்டு நிதியத்துக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடமிருந்து 20 வீத நன்கொடை வழங்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் அழுத்தம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் எந்த அடிப்படையும் அற்றவை.
தடை செய்வதற்காக சதித்திட்டம்
கிரிக்கெட்டின் சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பெயரிலேயே கிரிக்கெட் சபையின் தலைவர் இதனை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு தெரிவித்திருக்கிறார்.
அதனால் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராந்து பார்க்க விசேட குழுவொன்றை அமைக்க வேண்டும். அதில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் இருக்கும் கிரிக்கெட் தொடர்பாக ஆர்வம் உள்ளவர்களை உள்ளடக்க வேண்டும்.” என்றார்
அதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதால் இந்த விடயம் இழுத்தடிக்கப்பட்டு அவ்வாறே மறைக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவுடன் இணைந்து இலங்கை கிரிக்கெட்டை தடை செய்வதற்காக சதித்திட்டம் தீட்டப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாஸ முன்னைய நாடாளுமன்ற அமர்வின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.