பெண் காவல்துறை உத்தியோகத்தருடன் தவறான நடத்தை : காவல்துறை உத்தியோகத்தர் பணிநீக்கம்
கடமையின் போது பெண் காவல்துறை கான்ஸ்டபிள் (WPC) ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மகுலுகஸ்வெவ காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் தற்காலிகப் பணிநீக்கம் (Interdicted) செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை தரப்பு தகவல்களின்படி, கடந்த ஜூலை 15ஆம் திகதி தம்புள்ளை கமுதாவ மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு இந்த கான்ஸ்டபிள் காவல் நிலையத்திற்குத் திரும்பியுள்ளார்.
பெண் காவல்துறை உத்தியோகத்தரின் மடியில் அமர முயற்சி
அவ்வாறு திரும்பிய பின்னர், அங்கு அமர்ந்திருந்த பெண் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரிடம் சென்று, அவரது மடியில் அமர முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அந்த பெண் காவல்துறை கான்ஸ்டபிள் உடனடியாக இச்சம்பவம் குறித்து நிலையப் பொறுப்பதிகாரியிடம் (OIC) புகாரளித்துள்ளார்.

நிலையப் பொறுப்பதிகாரி இது குறித்து பிரிவுக்குப் பொறுப்பான உதவி கால்துறை அத்தியட்சகருக்கு (ASP) அறிவித்ததைத் தொடர்ந்து, முதற்கட்ட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
மதுபோதையில் இருந்த காவல்துறை கான்ஸ்டபிள்
இச்சம்பவத்தின் போது குறித்த காவல்துறை கான்ஸ்டபிள் மதுபோதையில் இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விசாரணையைத் தொடர்ந்து, உதவி காவல்துறை அத்தியட்சகரின் உத்தரவின் பேரில், மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை அந்த காவல்துறை கான்ஸ்டபிள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… 8 மணி நேரம் முன்