சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் 16 பேர் அதிரடி கைது!
ஹோமாகமவில் சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 சாரதிகள் காவல்துறை போக்குவரத்துப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் அதிவேகமாகச் சென்று அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்து ஹோமாகம காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில், சைலன்சர்களை மாற்றுதல், பக்கவாட்டுக் கண்ணாடிகள் மற்றும் மண் காப்பான்களை அகற்றுதல், இலக்கத் தகடுகள் இல்லாமை மற்றும் விளக்கு அமைப்புகளில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
குறித்த மோட்டார் சைக்கிள்கள் பரிசோதனைக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகனப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படுவதற்காக காவலதுறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகம தலைமையக காவல்துறை போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |