கள்ளத்தோணி என்ற அடையாளத்தில் இன்றும் மலையக மக்களை அடக்க நினைக்கும் முதலாளித்துவச் சுரண்டல்
நுவரெலியா, களனிவெலி பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் லவர்ஸ்லீப் தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று வீட்டுக்கான அத்திவாரம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மீண்டும் அந்த வீட்டின் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க நிர்வாகம் தடைவிதித்துள்ளதாக வீட்டு உரிமையாளர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது ஒரு மலையக குடும்பம் வீடு கட்டுவதற்கு ஏற்பட்டுள்ள தடையாக மட்டும் பார்க்கப்பட வேண்டிய சம்பவமா?
அல்லது, பல தலைமுறைகளாக மலையக மக்கள் எதிர்கொண்டு வரும் காணி உரிமை மற்றும் தோட்ட நிர்வாக அதிகாரம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினையின் மற்றுமொரு வெளிப்பாடா?
குறித்த குடும்பத்தின் தகவலின்படி, சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் வீட்டை அமைப்பதற்காக தோட்ட நிர்வாகத்திடம் எழுத்துமூலம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்த பின்னர் வீட்டுக்கான அத்திவாரமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு, வீட்டின் உரிமையாளர் வெளிநாடு சென்றுள்ளார்.
அங்கு உழைத்து பெற்ற பணத்தைக் கொண்டு தற்போது மீண்டும் வீட்டின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க முயன்றபோதே பிரச்சினை ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.
அப்படியானால், மூன்று வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் அனுமதிக்கு என்ன நடந்தது? அல்லது அது ஏதேனும் காரணத்தால் ரத்து செய்யப்பட்டதா?
காரணங்கள் இன்றி மலையக சமூகத்தை அடிமைப்படுத்திவரும் இந்த தோட்ட நிர்வாககங்களின் ஆடாத்தான ஆதிக்க நிலைக்கு அரசாங்கமும் தகுந்த நடவடிக்கை எடுக்கின்றதா என்பது இங்கு எழும் பெரும் கேள்வி.
நிர்மாணப் பணிகள் இடம்பெற்ற இடத்திற்கு லவர்ஸ்லீப் தோட்டத்தின் பிரதி முகாமையாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் சென்று, தோட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி வீடு அமைக்கப்படுவதாகக் கூறி பணிகளை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாக வீட்டு உரிமையாளர் தரப்பு தெரிவிக்கிறது.
ஒரு குடும்பம் அத்திவாரம் அமைக்கும் அளவுக்கு நிர்மாணப் பணியை முன்னெடுத்தபோது ஆட்சேபனை தெரிவிக்காமல், மீண்டும் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
இந்தக் கேள்விகளுக்கு நிர்வாகத் தரப்பிலிருந்து வெளிப்படையான பதில் வர வேண்டியுள்ளது.
இது ஒரு வீட்டின் பிரச்சினை. பின்னணியில் 200 ஆண்டுகால கேள்வி . இந்தச் சம்பவத்தை இங்கேயே நிறுத்திவிட முடியாது.
மலையக மக்கள் இந்த நாட்டின் பெருந்தோட்டப் பொருளாதாரத்தில் தலைமுறைகள் கடந்தும் உழைத்து வருகின்றனர். ஆனால் தாங்கள் வாழ்ந்து வரும் நிலத்தின் மீது நிரந்தரமான காணி உரிமை எப்போது கிடைக்கும்? என்ற கேள்வி இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.
தொடர்ந்தும் மலையக மக்கள் தமது தேவைகளுக்கும் உரிமைகளுக்கும் தோட்ட நிர்வாகத்தின் அனுமதியை நாட வேண்டிய நிலை தொடர்ந்தால், மலையக மக்களின் காணி உரிமை நடைமுறையில் எவ்வளவு உறுதியாக உள்ளது?
மக்கள் தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தில் அவர்களது சொந்த வீட்டை அமைப்பதற்கான முடிவை எடுக்கக்கூடிய அதிகாரம் அவர்களிடம் இல்லாத நிலை தொடர வேண்டுமா?
மலையக மக்களுக்காக அரசியல் ஆசனம் ஏறி நிற்கும் எவராலும் இதற்கு நிரந்தர தீர்வை இன்றுவரை பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
ஏன் உறுதிமொழிகளை அள்ளி வழங்கிய என்.பி.பி அரசாங்கமும் ஆட்சிக்கு வந்து தீர்வின்றி தொடரும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. அப்படியாயின் தோட்ட நிர்வாகத்தின் அதிகாரம் எங்கே முடிகிறது? மக்களின் உரிமை எங்கே தொடங்குகிறது?
தோட்ட நிர்வாகம் தனது நிர்வாகப் பொறுப்புக்குள் உள்ள நிலங்களை நிர்வகிப்பது ஒரு விடயம். ஆனால் அந்த நிர்வாக அதிகாரம் ஒரு குடும்பத்தின் அடிப்படை வாழ்விடத் தேவையையே கட்டுப்படுத்தும் அளவுக்கு விரிவடைகிறதா? என்பதே இங்கு ஆராயப்பட வேண்டும்.
அனுமதி வழங்கும் அதிகாரமும் அதனை மறுக்கும் அதிகாரமும் ஒரே தரப்பிடம் இருந்தால், அந்த நடைமுறை எவ்வளவு வெளிப்படையானது.
மக்களுக்கு வழங்கப்படும் காணி அல்லது வீட்டு அனுமதிகளுக்குத் தெளிவான சட்டப் பாதுகாப்பு உள்ளதா அல்லது, தோட்ட நிர்வாகத்தின் முடிவைப் பொறுத்தே ஒரு குடும்பத்தின் வீட்டு கனவும் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும் நிலை இன்னும் தொடர்கிறதா?
இந்தச் சம்பவத்தில் மேலும் ஒரு தீவிரமான குற்றச்சாட்டு நிர்வாகியின் வார்த்தை பிரயோகம்.
நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு கூறியபோது ஏற்பட்ட வாய்த்தகராறில், நிர்வாகத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் தம்மை “கள்ளத்தோணி” என அவமதிக்கும் வகையில் பேசியதாக வீட்டு உரிமையாளர் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த கருத்து எம் மலையக சமூகத்தை அடிமைகளாக பார்க்கும் அவர்களின் உயிரையும் உதிரத்தையும் உறிஞ்சும் பண பார்வை கொண்டவர்களின் மனநிலையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
மேலும் இலங்கையின் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவான பங்களிப்பை வழங்கி வரும் மலையகத் தமிழ் மக்களை, 'கள்ளத்தோணி' (சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்) என்ற அவதூறுச் சொல்லால் இழிவுபடுத்தும் போக்கு கண்டிக்கத்தக்கது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மனித மாண்பையும், அவர்களின் வரலாற்று உழைப்பையும் கொச்சைப்படுத்தும் இத்தகைய சொற்பிரயோகங்கள், பல்லினச் சமூகக் கட்டமைப்பில் பெரும் அதிர்வை தற்போது ஏற்படுத்தியுள்ளதது.
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் கடும் சவால்களுக்கு மத்தியில் தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்து, காடுகளை அழித்து, நாட்டின் முதன்மை அந்நியச் செலாவணி ஈட்டும் துறையை உருவாக்கியவர்கள் மலையக மக்கள்.
எம்மவரை 'சட்டவிரோதக் குடியேறிகள்' என்ற தொனியில் 'கள்ளத்தோணி' என அழைப்பது, அவர்களின் அளப்பரிய தியாகத்தையும் நாட்டின் மீதான உரிமையையும் திட்டமிட்டு நிராகரிக்கும் ஒரு செயலே.
1948 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் மூலம் மலையக மக்கள் தசாப்த காலங்களாக எதிர்கொண்ட 'நாடற்றவர்கள்' என்ற வரலாற்றுத் துயரமும் ஒடுக்குமுறையும் மிகப்பாரியவை.
பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அவர்களது குடியுரிமைச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ள சூழலில், மீண்டும் இச்சொற்களைப் பயன்படுத்துவது பழைய வடுக்களைக் கிளறி அவர்களைப் பாரபட்சமாக ஓரங்கட்டும் உத்தியாகும். இது ஒரு பாரிய மனித உரிமை பிரச்சனை.
மனித உரிமை ஆய்வாளர்களின் கருத்துப்படி, இத்தகைய இன ரீதியான அவதூறுகள் வெறும் தனி நபர் விமர்சனங்கள் அல்ல. மாறாக, சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வெறுப்புப் பேச்சின் வெளிப்பாடாகும்.
நாகரிகமடைந்த ஒரு மக்களாட்சிச் சமூகத்தில், எவரொருவரையும் இனம், மொழி அல்லது வர்க்கப் பின்னணியைக் கொண்டு இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
மலையகத் தொழிலாளர்களை நோக்கி வீசப்படும் இத்தகைய அவதூறு வார்த்தைகள் முற்றிலும் கண்டிக்கத்தக்கவை என்பதோடு, ஊடக மற்றும் அரசியல் பரப்பில் ஆரோக்கியமான, மாண்புமிகு சொற்பிரயோகங்கள் பேணப்பட வேண்டும் என்பதே தற்போதைய சமூக அக்கறையாளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
இன்று லவர்ஸ்லீப் தோட்டத்தில் ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சினை நாளை இன்னொரு குடும்பத்திற்கும் ஏற்படாதிருக்க வேண்டுமெனில், தனிப்பட்ட முறையில் பிரச்சினையைத் தீர்ப்பது மட்டும் போதாது.
அதனைவிட முக்கியமாக, மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமை தொடர்பில் நீண்டகால, சட்டரீதியான மற்றும் நிரந்தரமான தீர்வு உருவாக்கப்பட வேண்டியுள்ளது.
இல்லையெனில், 200 ஆண்டுகளாகியும் நிலம் எங்களுடையதா என்ற கேள்விக்கு விடை தெரியாமல், தலைமுறைகள் மட்டும் மாறிக்கொண்டே போகும்.
மக்கள் வாழும் நிலத்தின் மீது மக்களுக்கே நிரந்தர உரிமை எப்போது?”
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |