சர்வதேச கடற்பகுதியில் ரஷ்ய கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் : விரிவடையும் போர்க்களம்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடரும் போருக்கு மத்தியில், போல்டிக் கடலில் ரஷ்யக் கப்பல் ஒன்று மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டநிலையில் கப்பல் தீப்பிடித்து பின்லாந்து கடல் பகுதிக்குள் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றையதினம்(21) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லெனின்கிராட் பிராந்தியத்தின் ஆளுநரான அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோவின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல் சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
தாக்குதல் நடந்த இடம்
இந்தத் தாக்குதல் நடந்த இடம், ரஷ்யாவின் கோக்லாண்ட் தீவுக்கு மேற்கிலும், ரஷ்ய கடல் எல்லையிலிருந்து சுமார் மூன்று கடல் மைல் தொலைவிலும் இருந்தது. அந்தக் கப்பல் ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது என அவர் கூறியுள்ளார்.

ட்ரோன்களின் தாக்குதலுக்குள்ளான ரஷ்யக் கப்பல் பணியாளர்கள், அருகிலிருந்த சரக்குக் கப்பல் ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அங்கிருந்து நேரடியாக ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய ஆயுதப் படைகளுடன் தொடர்பு
'ஸ்பார்டா II' (Sparta II) எனும் இந்தக் கப்பல் ரஷ்ய ஆயுதப் படைகளுடன் தொடர்புடையது என்று பின்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தக் கப்பல் தெற்கு பின்லாந்தின் லோவிசா (Loviisa) நகருக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டுள்ளது; அங்கு கடலில் தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |