யாழ். பல்கலை மோதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய நடவடிக்கை
யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தைச் சேர்ந்த இரு மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து உள்விசாரணை ஒன்றைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் பல மாணவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் சிரேஷ்டப் பேராசிரியருமான டி. வேல்நம்பி, காவல்துறை விசாரணைகளுக்கு மேலதிகமாக இச்சம்பவம் தொடர்பாகப் பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு தனி விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை
முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் இரண்டு குழுக்களுக்கு இடையே நவம்பர் 19 அன்று இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மூன்று மாணவர்கள் காயமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கோப்பாய் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் நவம்பர் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |