தடையின்றி எரிபொருள் விநியோகிக்க புதிய ஒப்பந்தம் கைச்சாத்து
சிறிலங்காவிற்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் எரிபொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக சிறிலங்கா அரசாங்கம், ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks Inc) நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (08) அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யூ.கே.மாபா பத்திரன மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் தலைவர் ஜெஸ்டின் டிவிஸ் (Justion Divis) ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
45 நாட்களுக்குள் முன்னெடுப்பு
அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டதன் பின்னர் ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனம் ஷெல் நிறுவனத்துடன் இணைந்து 45 நாட்களுக்குள் முன்னெடுப்புக்களை ஆரம்பிக்க இந்த ஒப்பந்தத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களான டி.வி.சானக, இந்திக அனுருத்த, ஷெஹான் சேமசிங்க தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் குறித்த அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர் என அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
சினோபெக் நிறுவனத்துடன்ஒப்பந்தம்
இதேபோன்று கடந்த மே மாதம் 22 ஆம் திகதி சினோபெக் ஒயில் லங்கா தனியார் நிறுவனம் (M/s Sinopec Fuel Oil Lanka (Private) Limited ) (M/s Sinopec) மற்றும் அதன் தாய் நிறுவனத்துடன் நாட்டில் சில்லறை எரிபொருள் வர்த்தகத்தில் பிரவேசிப்பதற்கு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
