இலங்கையில் சதிவலை பின்னும் இந்தியா! சாவுமணியாக மாறும் என எச்சரிக்கை
இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன், வடக்கு கிழக்கு தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதி வலையை இந்தியா பின்னுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன் அடிப்படையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பானது, ஒரு சில மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் (Tharmalingam Suresh) சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் வீதியிலுள்ள கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“இன்று சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக கோட்டாபய அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்காக திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கின்றனர். அது முற்று முழுதாக சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகவே நடைபெற்றுக் கொண்டிக்கின்றது.
இந்த நிலையிலே ஒரு சில மாதங்களில் அந்த அரசியல் யாப்பை முன்வைப்பதற்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் சீனாவின் வருகையை அடுத்து கட்டுப்படுத்துவதற்காக இந்தியா எவ்வாறான விடையங்களை செய்யவேண்டும் என இந்த அரசோடு பேசி இலங்கையில் இருக்கின்ற தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் அடக்க கூடியவாறு பேசி செய்து தருவோம். ஆனால், நீங்கள் சீனாவின் உடைய வருகையை மட்டுப்படுத்த வேண்டும். இந்த நிலைப்பாட்டிலே இந்த அரசியல் அமைப்பு கொண்டுவரப்படுகின்றது.
குறிப்பாக 13 ஆவது திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றது. அது 1987 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் இந்த 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் அது கொடுக்கவில்லை. மாறாக தமிழ் மக்கள் தொடர்ந்து அடக்குமுறையான காணி அபகரிப்புக்கள், வாழ்வியல் என முழுக்க அழிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு இருக்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்ந்த ஏனைய அரசியல் தலைவர்கள் மீண்டும் அதனை புதுப்பிக்கும் விதமாக வந்து, அந்த அரசியல் அமைப்பிலே 13 ஆவது திருத்தத்தை புகுத்தி அதிலே மாகாணசபை முறைமைகளை இருப்பதாக காட்டிக்கொண்டு தாங்கள் சொல்லித்தான் அரசு அந்த வேலைத்திட்டத்தை செய்கின்றது என்ற நிலைப்பாட்டை காட்டுவதற்காக இந்த 6 கட்சிகளால் கடந்த 18-1-2022 இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டது.
இது தமிழ் மக்களை மீண்டும் ஒரு சதிவலையான அழிவுக்குள் கொண்டு போவதற்கான ஒரு சாவுமணியாகத் தான் இருக்கின்றது.
தமிழ் மக்களை பொறுத்தமட்டிலே 1948 ஆம் ஆண்டில் இருந்து இதுவரைக்கும் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிவருகின்றார்கள். அன்றில் இருந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அடக்குமுறைக்குள் உட்பட்டுவருகின்றார்கள். அவர்களுடைய உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இறையாண்மை கையகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது இந்தியா தன்னுடைய தேசிய பாதுகாப்புக்காக இங்கே இருக்கின்ற தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல், வெறுமனவே தங்களின் நலனுக்காக மட்டும் எங்களுடைய மக்களின் அபிலாஷைகளை துக்கி எறிந்துவிட்டு வெறுமனவே உப்புச் சப்பு இல்லாத 13 ஆவது திருத்தத்தை கொண்டுவருவதற்குரிய தங்களுடைய கைக்கூலிகளாக இருக்கின்ற முகவர்களை இங்கே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
மக்கள் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த 13 ஆவது திருத்தத்தில் எவ்விதமான பாதுகாப்பும் இல்லை. அது கடந்த 34 வருடங்களுக்கு மேலாக நிராகரிக்கப்பட்ட ஒன்று. அந்த அடிப்படையில் இப்போது சரியான தலைவர்களை இனங்கண்டுள்ளனர்.
6 தலைவர்களால் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்ட கடிதம் தொடர்பாக நேற்றுமுன்தினம் நியாயம் கற்பிக்க 6 தலைவர்களும் இணைந்து ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்தியுள்ளனர். எனவே இவர்கள் தான் இந்தியாவினுடைய கைக்கூலிகளும் அவர்களுடைய எடுபிடிகளுமாக இருக்கின்றனர்.
இந்தியாவுக்கும் எமக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் தமிழ் மக்களை அவர்களது அடிமைகளாக அடக்கக்கூடாது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நன்கு தெரியும். எனவே அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்தியாவின் செயற்பாடு இருக்கவேண்டும்” என்றார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்