காலநிலை மாற்றத்திற்கு அடிப்படைக் காரணம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் செயற்பாடே..! ரணில் குற்றச்சாட்டு
அபிவிருத்தியடைந்த நாடுகளின் கட்டுப்பாடற்ற தொழில்மயமாதலே காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்றும், இதன் விளைவுகளையே வறிய நாடுகள் அனுபவிக்க நேரிட்டுள்ளது என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
எகிப்தின் ஷாம் அல்-ஷேக் நகரில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, போதுமான நிதி இல்லாததால் வறிய நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, இந்த நாடுகள் தங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க போராடும் அதேவேளையில் பொருளாதார ரீதியாக முன்னேறவும் போராடுவதனால், இந்த நாடுகள் இரட்டை ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
காலநிலை தொடர்பான பாதிப்பு

எனவே, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் தமது நிதியை இரட்டிப்பாக்குவதன் மூலம் அபிவிருத்தியடைந்த நாடுகள் கிளாஸ்கோவில் வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டுமென்றும் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
காலநிலை தொடர்பான பாதிப்புகளை அடையாளப்படுத்தும் பேரவையால் முன்மொழியப்பட்டதற்கமைய, எதிர்கால சவால்களுக்கு பதில் வழங்கக்கூடியவாறு சர்வதேச விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் ஒரு விசேட அறிக்கையை உருவாக்குவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.