கொரோனா கட்டுப்பாடு -நாமலுக்கு விசேட பதவி உருவாக்கமா? எழுப்பப்பட்டுள்ள கேள்வி
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கென அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு என விசேட பதவியை அரசாங்கம் உருவாக்கியுள்ளதா என ஜேவிபி கேள்வியெழுப்பியுள்ளது.
ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ்ஸ இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைளுக்கும் அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கும் உள்ள தொடர்பு குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும்.
தேசிய அளவில் தடுப்பூசியை செலுத்துவது குறித்து இடம்பெற்ற இராஜாங்க அமைச்சர்களின் அலரிமாளிகை கூட்டத்தில் நாமல் ராஜபக்சவும் கலந்துகொண்டமை குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர் சுகாதார அமைச்சருக்கு அப்பால் மூன்று அமைச்சர்கள் சுகாதார துறைக்கு பொறுப்பாகவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
நாமல்ராஜபக்சவிற்கு விளையாட்டுதுறை அமைச்சர் பதவியை வழங்கியமை குறித்து எவரும் கேள்விகேட்கப்போவதில்லை ஆனால் கொரோனாவைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அவரின் பங்களிப்பு குறித்து கேள்விகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.