இலங்கை மிக மோசமான நிலையை எதிர்கொள்ளும் - ஹேமந்த் ஹேரத் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவல் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது. மிக மோசமான நிலையை எதிர்கொள்ள நேரலாமென சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த் ஹேரத் தெரிவித்துள்ளார்.
தினமும் அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2,000 மற்றும் 2,500 ஆக அதிகரிக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் மாத்திரம் 1900க்கும் மேற்பட்ட வைரஸ் தொற்று நோயாளர்கள் புதிதாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் அந்த தொகை நாளை மறுதினம் 2,500 ஆக அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனை கருத்திற் கொண்டு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் தளர்த்தப்பட்டுள்ள பயணத் தடையை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இனியும் நாட்டை முழுமையாக முடக்க முடியாது என தெரிவித்துள்ள அவர்,நாட்டின் பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு மக்கள் புரிந்துணர்வுடன் செயற்படுவது அவசியமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டிய காலம் இது என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.