இலங்கையர்க்கு மூன்றாவது தடுப்பூசி அவசியமா? வைத்திய கலாநிதியின் கருத்து!
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தனிநபர்கள் கொரோனா வைரஸிலிருந்து போதுமான அளவு பாதுகாக்கப்படுவதாகவும் மேலதிக தடுப்பூசி டோஸ் அவசியமற்றது எனவும், கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகள் ஏற்கனவே மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்துள்ள நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவிற்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு திறன் குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்காவின் ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தி காணப்படக்கூடிய கால எல்லை, அதன் தன்மை உள்ளிட்ட விடயங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டார். அஸ்ட்ராசெனகா மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களூடாக இந்த ஆய்வுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆய்வுகளுக்கு தேவையான மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் கொரோனாவிற்கு எதிராக முதல் இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டதன் பின்னரே மூன்றாவது தடுப்பூசி குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் இரண்டு தடுப்பூசிகளின் செயற்றிறனின் பெறுபேறுகளுக்கு அமையவே மூன்றாவது தடுப்பூசி குறித்து சிந்திக்க வேண்டும் என கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார். இதேவேளை, மக்கள் தொகையில் பாதிக்கு மேல் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியைப் பயன்படுத்திய இஸ்ரேல், ஊக்குவிப்பு மூன்றாவது டோஸ் வழங்கலை ஆரம்பித்த முதல் நாடாக பதிவாகியுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கப்படுவதோடு, ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை ஜூலை இறுதியில் பெற்றுக்கொண்டுள்ளார்.
பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ள சிலருக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் மூன்றாவது அளவை வழங்க அங்கீகாரம் அளித்துள்ளது.
இதற்கிடையில், பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கிடையேயான இடைவெளியை நீக்குவதற்கு கொரோனா தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸை வழங்குவதை தாமதப்படுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.