இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் வெளியிட்ட செய்தி
2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி கிடைக்கப்பெறுமென தொற்று நோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, உலகில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 522 கொரோனா தொற்றாளர்கள் கடந்த 2020ஆம் ஆண்டில் இனங்காணப்பட்டுள்ளனர்.
தெற்காசியாவில் இது மிகவும் அதிகமாகும். ஒவ்வொரு மில்லியனுக்கும் 5,809 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். எமது நாட்டில் மில்லியனுக்கு 1,886 பேர் கொவிட்19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மில்லியன் சனத்தொகைக்கும் 09 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். தெற்காசியாவில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
என்றாலும் எமது நாட்டில் ஒவ்வொரு மில்லியன் சனத்தொகைக்கும் 09 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட பல நிறுவனங்கள் இணைந்து கொவிட்19 தடுப்பூசியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க பணியாற்றிவரும் நிலையில் எமது நாட்டின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு இவ்வருடத்தின் முதல் காலாண்டில் கொவிட்19 தடுப்பூசி கிடைக்குமென உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றார்.