இன்று கொழும்பை முற்றுகையிடத் தயாராகும் நாட்டு மக்கள்! பீதியில் அரச தரப்பு
அரசாங்கத்திற்கு எதிராக, சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய போராட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது.
‘நாடு நாசம், மீட்டெடுப்போம்’ - எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், மக்களும் மற்றும் கட்சி ஆதரவாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.
நாட்டில் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துவருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் மக்களுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பும் சடுதியாக குறைவடைந்துள்ளது. பொருளாதாரமும் சிதைவடைந்துள்ளது. எனவே, இவற்றை சீர்செய்வதற்கு அரசாங்கத்திற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படவுள்ளது.
இன்றைய போராட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்படும். குறித்த காலக்கெடுவுக்குள் தீர்வு இல்லையேல் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் காலங்கள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை (ஜே.வி.பி) ஆகியனவும் அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.