கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொழும்பு (Colombo) - காசல்வீதி வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பகுதிகளில் இன்று (27) ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட சிலருக்கே நீதிமன்றம் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நிறைவுகாண் தொழில் வல்லுனர் சேவைக்கு சொந்தமான கற்கைநெறிக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களை பங்கேற்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று (27) போராட்டம் நடத்தப்படவுள்ளதாக மருதானை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
தடை விதித்து உத்தரவு
அதன்படி, மருதானை காவல்நிலைய பொறுப்பதிகாரியால் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, 04 பேருக்கு பரீட்சை நடைபெறும் நிலையங்களுக்குள் நுழைதல் மற்றும் நிற்பதற்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இணை சுகாதார அறிவியல் பட்டதாரிகள் ஒன்றியத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் எம்.என்.எம். நுஸ்ட்ரி அந்த ஒன்றியத்தின் செயலாளர் நதுன் தஷ்ரிக ஹேவாபத்திரண, அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் இணைப்பாளர் மதுஷன் சந்திரஜித், நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் ஆகியோருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இணை சுகாதார பட்டதாரிகள்
அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மருதானை காவல்துறை பிரிவில் உள்ள வைத்தியசாலை சதுக்கம், டீன்ஸ் வீதி, தி செரம் வீதி, கின்சி வீதி மற்றும் ரீஜண்ட் வீதி ஆகிய இடங்களில் நடைபாதைகளைத் தடுத்து, போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளன.
இணை சுகாதார பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களான தொடக்க நிலை தாதியர் கல்லூரி மற்றும் கொழும்பு தாதியர் கல்லூரியின் முன் நிற்பதற்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறன்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
