கொழும்பில் பாரிய போராட்டம் - காவல்துறை குவிப்பு (காணொளி)
இரண்டாம் இணைப்பு
கோட்டை புகையிரத நிலைய முன்றலில் தேசிய மக்கள் சக்தியினரின் போராட்டம் இன்று இடம்பெற்றது.
"ஈபிஎஃப்/ ஈடிஎஃப்” உள்ளிட்ட உழைக்கும் மக்களின் நிதியைக் கொள்ளையடிப்பதை உடனடியாக நிறுத்துமாறு கோரி அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டம் இடம்பெறும் பகுதியில் காவல்துறை பிரசன்னம் அதிகமாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




முதலாம் இணைப்பு
கோட்டை புகையிரத நிலைய சூழலில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பேரணிக்கு கோட்டை நீதவான் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 6 பேர் இன்று மதியம் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கொழும்பு கோட்டை பிரதேசத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தடை உத்தரவு

இப் பேரணி பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனக் கோரி ஆர்ப்பாட்ட பேரணியை தடை செய்யுமாறு கோட்டை நீதவானிடம் கோட்டை காவல்துறையினர் தடை உத்தரவு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, அதிபர் அலுவலகம், அதிபர் மாளிகை, நிதி அமைச்சு, மத்திய வங்கி, காவல்துறை தலைமையகம், கோட்டை புகையிரத நிலையம் மற்றும் ஓல்காட் மாவத்தை, லோட்டஸ் வீதி, யார்க் வீதி, வங்கி வீதி, சாத்தம் வீதி, முதலிகே மாவத்தை மற்றும் காலி முகத்திடல் பசுமை பகுதி ஆகிய பகுதிகளுக்குள் போராட்டக்காரர்கள் நுழைய வேண்டாம் எனவும், பொதுமக்களுக்கும் வாகன சாரதிகளுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதமாக வீதிகளை மறிக்க வேண்டாம் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.