பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சாக்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்பதனை ஏற்க முடியாது : பிரசன்ன ரணதுங்க
வரையறுக்கப்பட்ட நிலைக்கு அப்பாற்பட்டு நீதிமன்றம் செல்லவில்லை. இதனால் தான் பொருளாதார பாதிப்பு தொடர்பில் ஆராய தெரிவுக்குழுவை கோருகிறோம் என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(18) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
பொருளாதாரப் பாதிப்புக்கு யார் காரணம்
“பொருளாதாரப் பாதிப்புக்கு யார் காரணம் என்று குறிப்பிட்டுக் கொண்டு எதிர்க்கட்சியினர் அரசியல் பிரசாரம் செய்கிறார்கள்.
உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தவறாக சித்தரிக்கிறார்கள். சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற பல சம்பவங்களை மறந்து விட்டு செயற்படுவது கவலைக்குரியது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டு பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சாக்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிட முடியாது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கொண்டே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வரையறுக்கப்பட்ட நிலைக்கு அப்பாற்பட்டு நீதிமன்றம் செல்லவில்லை. இதனால் தான் பொருளாதார பாதிப்புக்கு தெரிவுக்குழுவை கோருகிறோம்.
பொருளாதார பாதிப்புக்கான காரணிகள் நீதிமன்றத்தில் முழுமையாக ஆராயப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
வரவு - செலவு திட்டம்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கிறார்கள்.
2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பல முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை, என்று விமர்சிக்கிறார்கள்.
குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைப்பதை எதிர்க்கட்சியினர் அடிப்படை கொள்கையாக கொண்டுள்ளார்கள். பொருளாதார பாதிப்புக்கு 69 இலட்ச மக்களாணையுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தீர்வு காணவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.
பாரிய நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு அப்போதைய அதிபர் கோட்டபய ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவரிடம் வலிறுத்தினார்.
ஆனால் அவர் அரசாங்கத்தை பொறுப்பேற்காமல் சோதிடம் பார்த்துக் கொண்டிருந்தார். நாட்டுக்காகவே நாங்கள் மாறுப்பட்ட அரசியல் கொள்கையுடைய ரணில் விக்ரமசிங்கவை அதிபராக தெரிவு செய்தோம்.
நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நாட்டுக்காகவே ஒன்றிணைந்து செயற்படுகிறோம் என்பதை மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள்.
மக்கள் விடுதலை முன்னணியினரின் கருத்து
பொருளாதார பாதிப்புக்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களுடனும் தொடர்புக் கொண்டுள்ளார்கள்.
பொருளாதார பாதிப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள போலியான போராட்டத்தை தோற்றுவித்தார்கள்.
போராட்டத்தின் ஊடாக பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |