கல்முனையில் தமிழ் திரையரங்கு ஒன்று செய்த நெகிழ்ச்சியான காரியம்
கொவிட் பெருந்தொற்று பேரிடர் காலப்பகுதியில், பல்வேறு வியாபார நிறுவனங்கள் போலவே திரையரங்குகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை யாவரும் அறிந்ததே.
திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், எந்தவித வருமானமும் இல்லாமல் திரையரங்குகள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், விதிவிலக்காக ஒரு குறிப்பிட்ட திரையரங்கு ,பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுவருகின்றது.
அம்பாறை மாவட்டம் கல்முனை - பாண்டிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள GK சினிமெக்ஸ் திரையரங்கே இந்த நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றது.
கொவிட் நிலைமையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சினிமெக்ஸ் திரையரங்கு நிறுவனத்தினரால் இருபது இலட்சம் ரூபாய் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று 20.06.2021 அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் தலைமையில் விநியோகப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரியநீலாவணை, பாண்டிருப்பு, மருதமுனை, கல்முனை, நற்பிட்டிமுனை, மணற்சேனை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு, , நாவிதன்வெளி, சவளக்கடை, சொறிக்கல்முனை, குளனிகள், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் பெரிய கல்லாறு ஆகிய இடங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த நிவாரணப் பணி முன்னெடுக்கப்படுகின்றது.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், வெளியே வருவதற்கான தடைகள், அச்சுறுத்தல்கள் மத்தியில் களப்பணியில் சமூக சேவையாளர்களான நிதர்சன், சி.சிறிரங்கன், த.சுதன், வே.அரவிந்தன் மற்றும் ஜெயந்த, வதுசன் ஆகியோரும் இந்த நிவாரணப் பணியில் ஈடுபட்டுவருவது பாராட்டுக்குரியது.









