உக்கிரமடையும் ரஷ்ய - உக்ரைன் மோதல்! இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு நெருக்கடி
அண்மைக் காலமாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்தே அதிக சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகின்றனர்.
உக்ரைன் நெருக்கடியால் அந்த நாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வருவது பாதிக்கப்படும்.இதனால் சுற்றுலாத்துறையில் பாரிய தாக்கத்தை எங்களிற்கு ஏற்படுத்தும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளார் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே (Jayanath Colombage)தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்திற்கு, உக்ரைன் நெருக்கடியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு நாடு தயாராகி வருகின்றது.
ரஷ்யாவின் நடவடிக்கை இலங்கையின் தேயிலை ஏற்றுமதிக்கும், எரிபொருள் இறக்குமதிக்கும், சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் காணப்படுவதாகவும், உக்ரைன் நெருக்கடி காரணமாக இலங்கை தேயிலையை விற்பனை செய்வது கடினமாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நெருக்கடியால் எரிபொருள் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில் இலங்கைக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு மேலும் டொலர்கள் தேவைப்படும்.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு மேலும் அதிக தொகையை இலங்கை செலுத்த வேண்டிய நிலையேற்படலாமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
