சுமந்திரன் பின்னுகின்ற பாய்க்கு ஓலை எடுத்துக்கொடுத்த சிறீதரன்! இனியாவது கொஞ்சம் மாறவேண்டும்!!
தமிழரசுக் கட்சியின் செயலாளராக குகதாசன் ‘இருகைகளையும் தூக்கி’ தெரிவுசெய்யப்பட்ட விடயம் தொடர்பாக ஏராளமான சர்ச்சைகள் பொதுப்பரப்பில் உலவந்துகொண்டிருக்கின்றன.
மட்டக்களப்பு முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனை செயலாளராக நியமிப்பதாக மறுபடியும் மட்டக்களப்புக்கு நேரில் சென்று வாக்குறுதி அளித்துள்ளார் கட்சியின் புதுத் தலைவர் சிறீதரன்.
இப்டியான காரியங்கள் எல்லாம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, 'மத்தியகுழுவில் குகதாசன் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டதற்கு தலைவர் சிறீதரனும் இணங்கியிருந்தார்' என்று சுமந்திரன் தற்பொழுது தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சுமந்திரன் இதனை உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
குகநாதன் செயலாளராகத் தெரிவுசெய்யப்படவேண்டும் என்பதற்காக மட்டக்களப்பு முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன் மற்றும் அரியநேந்திரன் போன்றவர்களை அந்தத் தெரிவுக்கு இணங்கும்படி சிறிதரன் கேட்டுக்கொண்டதாகக்கூட செய்திகள் வெளியாகியிருந்தன. ஒரு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு நெருங்கியவர்களிடம் அதனை உறுதிப்படுத்தியும் இருக்கின்றார்.
இப்பொழுது கேள்வி என்னவென்றால், தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் குகதாசன் தெரிவு பற்றி எடுக்கப்பட்ட தீர்மாணத்தை கட்சியின் தலைவரான சிறீதரன் ஆதரித்தாரா இல்லையா என்பதுதான்.
ஆதாரித்தார் என்பது உண்மையானால் பின்னர் எதற்காக அவர் மறுபடியும் மட்டக்களப்புக்குச் சென்று அங்கு சிறிநேசனுக்கு உங்களைச் செயலாளராக்குவேன் என்று வாக்களிக்கமுடியும்?
இன்னொரு விடயத்தைப் பார்ப்போம்.
தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தலின்போது ஒரு பரப்புரை பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருந்தது.
அதாவது தமிழ் தேசியத்துக்கு ஆதரவாகவா அல்லது தமிழ் தேசியத்துக்கு எதிராகவா நீங்கள் வாக்களிக்கப்போகின்றீர்கள் என்கின்ற ஒரு கேள்வி உறுப்பினர்கள் மத்தியில் கேட்கப்பட்டது.
அதாவது சிறீதரன் தமிழ் தேசியத்தின் சாயல் என்றும், சுமந்திரன் தமிழ் தேசியத்துக்கு எதிரான ஒருவர் போன்றும் காட்சிப்படுத்தப்பட்டார்கள்.
அந்தக் காட்சிப்படுத்தலை மறைமுகமாக ஏற்றுக்கொண்டே அந்த நேரத்தில் செயற்பட்டார் சிறீதரன்.
சுமந்திரன் தமிழ் தேசியவிரோதி என்பது உண்மையானால், அதற்கான கூட்டுப்பொறுப்பு சிறீதரனுக்கும் இருக்கின்றது என்பதை முதலில் சிறீதரன் ஏற்றுக்கொண்டாகவேண்டும்.
சுமந்திரனின் தமிழ் தேசிய விரோதச் செயல் என்று இன்று கூறப்படுகின்ற காரியங்களை சுமந்திரன் செய்கின்றபோது, அந்தக் காரியங்கள் அத்தனைக்கும் அருகே நின்று சாமரம் வீசிக்கொண்டிருந்தவர்தான் சிறீதரன்.
விடுதலைப் புலிகள் மனித உரிமை மீறல்களைச் செய்தார்கள் என்று சுமந்திரன் கூறியபொழுது சுமந்திரனுடன் கூடவே நின்று அவருக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருந்தர்தான்; சிறீதரன்.
விடுதலைப் புலிகளும் யுத்தக்குற்றங்களுக்காக விசாரிக்கப்படவேண்டும் என்று சுமந்திரன் கூறியபொழுது சிறீதரன் மௌனமாக அதனை அமோத்ததுக்கொண்டிருந்தார்.
முஸ்லிம்கள் விடயத்தில் விடுதலைப் புலிகள் ஒரு இனச் சுத்திகரிப்பைச் செய்தார்கள் என்று சுமந்திரன் கூறியபோதும் அதற்கு மறுப்பெதுவும் வெளியிடாமல் சுமந்திரனின் ஒரு அல்லக்கையாகவே வலம்வந்துகொடிருந்தவர்தான் சிறீதரன்.
சுமந்திரன் தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை என்று தமிழ் இனமே ஒருமித்த குரலில் கூக்குரலிட்டுக்கொண்டிருந்தபோது, அந்தச் சுமந்திரனை விடுதலைப்புலிகளின் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கத்துக்கு நிகரானவர் என்று ஒப்பிட்டுப் பேசியதுடன், கடந்த தேர்தலில் சுமந்திரனுக்காக வாக்குக்கேட்ட ஒருவர்தான் சிறீதரன்.
சுமந்திரன் பின்னுகின்ற பாய்க்கு ஓலை எடுத்துக்கொடுக்கும் வேலையைத்தான் கூசாமல் செய்துகொண்டிருந்தவர் சிறீதரன்
அதாவது, சுமந்திரன் ஒரு தமிழ் தேசிய விரோதி என்றால், அதற்கான கூட்டுப்பொறுப்பு சிறிதரனுக்கு முழுமையாகவே இருக்கின்றது.
அண்மையில் நடந்த மத்தியகுழுக் கூட்டத்தில் சுமந்திரன் தனது நாசுக்கான பேச்சால் உறுப்பினர்கள் மத்தியில் குழப்பதை ஏற்படுத்தி, அந்தக் குழப்பத்தின் பலனாக தனது ஆதரவாளரான குகதாசனை தெரிவுசெய்யும்படி காய்நகர்த்திவிட்டார் என்பது உண்மையானால், அதற்கான கூட்டுப்பொறுப்பு சிறிதரனுக்கும் இருக்கின்றது.
சிறீதரன் என்கின்ற தலைவர் முதலில் இதுபோன்ற தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ளவேண்டும்.
ஒரு முடிவை எடுக்கின்றபோது நிதானித்து, சாதக பாதகங்களை ஆராய்ந்து தனது முடிவினை எடுக்கவேண்டும்.
ஒரு தேசிய இனத்தின் தலைவர் ஸ்தானத்தை நோக்கி நகரமுற்படும் சிறீதரன் போன்றவர்கள் நிச்சயம் இதுபோன்ற தலைமைத்துவப் பண்புகளை கற்றுக்கொண்டேயாகவேண்டும்.