யாழில் இ.போ.ச. மற்றும் தனியார் பேருந்துகள் நாளை சேவையில் ஈடுபடும்
பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு
யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ். மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் நாளை முதல் ஐம்பது வீதமளவில் இயங்குமென யாழ். மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதாரன் தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் கல்கமுவ இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களினால் தாக்கப்பட்டுள்ளனர்.
தலாதகம எனும் பகுதியில் இந்தத் தாக்குதல் சம்பவம் பதிவாகியிருந்த நிலையில், குறித்த ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை ஊழியர்கள் கடந்த இரண்டு தினங்களாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியில் இருந்து வருகின்ற பேருந்துகள் உள்நுழையாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த நிலையிலேயே பணிப்புறக்கணிப்பு இன்று மாலை 4 மணி முதல் கைவிடப்படுவதாக தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
இதனையடுத்து, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக பேருந்து நுழைவாயிலில் போடப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளதுடன், விரைவில் இலங்கை போக்குவரத்து சபையின் வழமையான சேவை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகள் நாளை முதல் ஜம்பது வீதமளவில் இயங்கும்
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் நாளை முதல் ஜம்பது வீதமளவில் இயங்குமென யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் பொ. கெங்காதாரன் தெரிவித்தார்.
நாளை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளில் யாழ். மாவட்ட செயலக மேற்பார்வையில் எரிபொருளை பெற்றுத்தர அரச அதிபரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பேருந்துகளை நாளை முதல் இயக்க தீர்மானித்துள்ளதாக கூறினார்.
எரிபொருள் பெறுவதிலுள்ள சிக்கல்கள் காரணமாக யாழ். மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இன்றைய தினம் சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
