பிரித்தானியாவில் வரலாறு காணாத பணிப்புறக்கணிப்பு
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை வரலாற்றில் மிகப் பெரிய பணிப்புறக்கணிப்பை தாதியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தாதியர்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், நோயாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு

இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக வழமையான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், உயிர்காக்கும் மற்றும் அவசரமான சிகிச்சைகளுக்கான சேவைகளை தாதியர்கள் வழங்கி வருகின்றனர்.
கடுமையான குளிருடன் கூடிய வானிலைக்கு மத்தியிலும் இன்று காலை முதல் தாதியர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட மிகப் பழமையான தாதியர் தொழிற்சங்கமான The Royal College of Nursing, 19 வீத சம்பள அதிகரிப்பை கோரியுள்ளனர்.
எனினும் தாதிய தொழிற்சங்கத்தின் சம்பள உயர்வு கோரிக்கையானது அளவுக்கு அதிகமானது எனவும் சுயாதீன பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பள உயர்வை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கம் கூறியுள்ளது.
சம்பள உயர்வு

தாதியர் தொழிற்சங்கத்தின் சம்பள உயர்வு கோரிக்கையானது யாதார்த்தமற்ற ஒன்றென சுகாதார அமைச்சர் மரியா கோஃபீல்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சுகாதார அமைச்சர் நேர்மையற்ற ஒருவராக இருப்பதாக தாதியர் தொழிற்சங்க தலைவர் பட் கலென் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பானது, இரவு எட்டு மணி வரை தொடர்ந்துள்ளதுடன், மீண்டும் எதிர்வரும் 20 ஆம் திகதியும் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
புற்றுநோய்க்கான சிகிச்சை, சிறுநீரக தூய்மிப்பு சிகிச்சை, தீவிர மற்றும் முக்கிய சிகிச்சைகள், சிறுவர் விபத்து, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேற்று பிரிவு ஆகியன வழமைபோன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.