சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமையை நியமிப்பதில் இழுபறி!
இலங்கையின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் ஏர்லைன்ஸ், அதன் உயர் மட்டத் தலைமைப் பொறுப்புகளில் நிலவும் நீண்டகால வெற்றிடம் காரணமாகப் பெரும் நிர்வாகச் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ரிச்சர்ட் நட்டால் 2025 ஏப்ரலில் பதவி விலகியதைத் தொடர்ந்து, ஒரு வருடம் கடந்தும் அந்தப் பதவிக்கு இன்னும் எவரும் நியமிக்கப்படவில்லை.
பல கட்ட நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்ட போதிலும், தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய தலைவர்
இந்த நிலையில், கடந்த மார்ச் 31, 2026 அன்று நிறுவனத்தின் தலைவர் சரத் கணேகொட தனது பதவியை விட்டு விலகியது நிர்வாகச் சிக்கலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 17ஆம் திகதியான இன்று புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போது அந்த நியமனம் மேலும் தாமதமாகும் என்றே கூறப்படுகிறது.
புதிய தலைவர் பதவிக்கு இலங்கை சுற்றுலாத்துறைத் தலைவர் புத்திக ஹேவாவசம் மற்றும் எமிரேட்ஸ் காலத்தில் CEO-வாகப் பணியாற்றிய பீட்டர் ஹில் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதியின் விருப்பம்
இருப்பினும், சுற்றுலாத்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்தில் கொண்டு புத்திக ஹேவாவசத்தை அதே பதவியில் நீடிக்கச் செய்ய ஜனாதிபதி விரும்புவதாக தெரியவருகிறது.

Image Credit: Bloomberg News
பீட்டர் ஹில்லின் நியமனத்தைப் பொறுத்தவரை அவரது வயது மற்றும் வெளிநாட்டவர் என்ற காரணிகள் அரசியல் ரீதியான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தனது 48-வது ஆண்டு நிறைவை நெருங்கும் வேளையில், உலகளாவிய விமானப் போக்குவரத்துச் சந்தையில் கடும் போட்டியை எதிர்கொள்ள நிலையான தலைமைத்துவம் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |