மிகப் பெரிய ஆபத்து..! ரில்வின் சில்வா கருத்துக்கு விக்னேஸ்வரன் கடும் எதிர்ப்பு
எல்லோரும் சமம் என்றால் அது மிகப் பெரிய ஆபத்து, ரில்வின் சில்வா போன்றவர்கள் அவ்வாறு கூறுவது பிழை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் (CV Vigneswaran) தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் (CV Vigneswaran) இல்லத்தில் நேற்று (19.10.2024) மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டது.
தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாற்றான கொள்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், “13 ஆவது திருத்த சட்டத்துக்கு எதிராக அந்தக் காலத்தில் இருந்து ஜே.வி.பியினர் (JVP) செயற்பட்டனர். ஆனால், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அதற்கு மாற்றான கொள்கையுடன் அவர்கள் வாக்குக் கேட்டனர்.
இவ்வாறான நிலையில் இப்போது மீண்டும் தமது நிலைப்பாட்டையா ரில்வின் சில்வா ஊடாக வெளிப்படுத்த ஜே.வி.பியினர் முயல்கின்றனர்?
ஆனாலும், அக்கட்சியின் பிமல் ரத்நாயக்க அப்படி அவர் கூறவில்லை என்றவாறாகக் கூறியிருக்கின்றார். இதனூடாக தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறான கருத்துக்களைக் கூறுவது அந்த மக்களின் மனங்களை நோகச் செய்யும் என்பது அவர்களுக்கே தெரிகின்றது போல் உள்ளது.
இந்த 13ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது.
மிகப் பெரிய ஆபத்து
ஆனாலும், இப்போது இருக்கும் 13ஐயும் நாங்கள் பறி கொடுத்துவிட்டு ஜே.வி.பியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும்.
ஏனெனில் இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிங்களவர்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையும் மொழியும் மதமும் எங்கள் எல்லோரையும் பீடிக்கக் கூடியதாகத் தான் அமையும்.
ஆகையினால் அவ்வாறான கருத்துக்களை நாங்கள் கண்டிக்கின்றோம். ரில்வின் சில்வா போன்றவர்கள் அவ்வாறு கூறுவது பிழை என்று தெளிவாகக் கூறுகின்றோம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |