இணையப் பாதுகாப்பு சட்ட வரைபு : தமிழ் முஸ்லிம் கட்சிகள் எதிராகக் குரல் கொடுக்கத் தயங்குவது ஏன்...!
இணையப் பாதுகாப்பு சட்டம் எனப்படும் நிகழ்நிலைக் காப்புச் சட்ட வரைபுக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் மலையகத் தமிழ்க் கட்சிகளும் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் குரல் கொடுக்காமல் அமைதிகாப்பதாகத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சார்பில் ஊடகத்துறை விரிவுரையாளரும் பத்திரிகையாளருமான அமிர்தநாயகம் நிக்ஸன் குற்றம் சுமத்தியுள்ளார்.
'அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போம்” என்ற தொனிப் பொருளில் கொழும்பில் உள்ள இதழியல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே நிக்ஸன் இவ்வாறு கூறினார்.
நிறைவேற்று அதிகார அதிகரிப்பு
நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் காலம் காலமாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான நகல் வரைபும் இணையத்தளச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவுள்ள நிகழ்நிலைக்காப்புச் சட்ட நகல் வரைபும் நிறைவேற்று அதிகாரத்தை மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை. வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இன்றுவரை இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் அச்சுறுத்தல்களும் தொடருகின்றன.
குறிப்பாகத் தமிழ் ஊடகவியலாளர்களும் தமிழ் சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
முப்பது வருடப் போர்க் காலத்திலும் 2009 மே மாதத்தின் பின்னரான பதின் நான்கு வருடங்களிலும் தமிழ் ஊடகத்துறை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில் இந்தப் புதிய சட்டவரைபுகள் தொடர்பாகக் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உண்டு. ஆனால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொளனமாக இருப்பதாக நிக்ஸன் கவலை வெளியிட்டார்.
இந்தப் புதிய சட்டங்களுக்கான வரைபுகள் அரச வர்த்தமானி இதழில் வெளியிடப்பட்டுள்ளமை ஊடகச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது எனவும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையும் நிகழ் நிலைக்காப்புச் சட்டத்தையும் அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை, ஊழல்மோடி, அதிகாரத் துஸ்பிரயோகம் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்பட்டுச் சம்பத்தப்பட்ட அமைச்சர்கள், அரசியல்வாதிகள் கைது செய்யப்படவில்லை. ஊழல்மோசடிகள்; அரச மட்டத்தில் இடம்பெறுகின்றன.
ஊடகங்களை கட்டுப்படுத்த முனைவது ஏன்?
இதேவேளை, இது தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தி வரும் சமூகச் செயற்பாட்டாளர்கள், சமூகவலைத்தளங்களைக் கட்டுப்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏன் நடவடிக்கை எடுக்கிறார் என்று தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெகான் பெரேரா கேள்வி எழுப்பினார்.
முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரகேசர இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. பௌத்த தேரர்கள் வடக்குக் கிழக்கில் நீதித்துறையை அச்சுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இவை பற்றி அரசாங்கம் எந்த ஒரு விசாரணைகளையும் நடத்த முன்வராத நிலையில், ஊடகங்களையும் சமூகவலைத்தங்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின், இதன் பின்னணியில் ஆபத்தான அரசியல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஊடக அமைப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் மற்றும் சமூகவலைத்தள செயற்பாட்டாளர்களும் இணைந்து இந்தச் செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.