வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு போராட்டத்தில்..
முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் நீதிமன்ற செயற்பாடுகள் செயலிழந்துள்ளதுடன் வழக்குகளுக்காக வருகை தந்த மக்கள் மீண்டும் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு
கவனயீர்ப்பு போராட்டம்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு மாகாணங்களிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது இன்று (03.09.2023) காலை 11 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக ஆரம்பித்து பேரணியாக முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தையடைந்து மீண்டும் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக எதிர்ப்பு கண்டன போராட்டத்தை தொடர்ந்து நிறைவு பெற்றிருந்தது.
குறித்த போராட்டத்தில் நீதித்துறை மூலம் நீதியான சட்டவாட்சி நடைமுறைப்படுத்துவதை தடுக்காதே, கௌரவ நீதிபதிகளின் கடமையில் தலையிடாதே!, நீதி அமைச்சரே அநீதிக்கு துணை போகாதே, நீதிபதிகளின் பாதுகாப்பை குறைக்காதே, நீதித்துறையை சுயாதீனமாக செயற்படவிடு, கௌரவ நீதிபதிகளே சட்டத்தரணிகளாகிய நாங்கள் உங்களுடன், நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்போம் போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் கிளிநொச்சி, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வடக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து சட்டத்தரணிகள் சங்கங்களின் சட்டத்தரணிகளும் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது வடமாகாணத்திலுள்ள ஏனைய மாவட்ட சட்டத்தரணிகள் குறித்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் இரண்டு வாரத்திற்கு கறுப்பு நிற முகக்கவசம் அணிந்து கடமையில் ஈடுபட இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் காலவரையறையின்றி தொடர் நீதிமன்ற புறக்கணிப்பினை மேற்கொள்வதோடு முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினை சார்ந்த அனைவரும் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாது
தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பார்கள் எனவும் நேற்றையதினம் இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றப் புறக்கணிப்பு
முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(03) இரண்டாவது நாளாக தொடர்கிறது.
நீதித் துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைக்களும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(03) இரண்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாணம்
யாழ். மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இன்றையதினம் (11) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
முல்லைத்தீவு நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ள நிலையில், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, யாழ்மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
மன்னார்
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் சட்டத்துறையிலும் நீதித்துறையிலும் இடம்பெறும் அத்துமீறல்களை நிறுத்தக்கோரியும் இன்றையதினம்(3) மன்னார் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
அதே நேரம், முல்லைத்தீவில் இடம் பெற்றுவரும் போராட்டத்திலும் கலந்து கொண்டு நீதிபதி சரவணராஜவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் போராட்டத்திற்கு வலுச் சேர்த்துள்ளனர்.
இன்று மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை என்பதுடன் வழக்குகளுக்காக சமூகளித்த பொது மக்களும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
திருகோணமலை
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் இன்று (03) சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீதித்துறைக்கு ஏற்பட்ட இந்த அச்சுறுத்தலை கண்டித்து சட்டத்தரணிகள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சட்ட ஆட்சியை நிலை நிறுத்து, நீதித்துறையில் தலையிடாதே! நீதித் துறையை சுயமாக இயங்கவிடு, வலுவேறாக்கத்தினை முறையாக பேணுங்கள் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி நீதிமன்ற பணிப் புறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்பாட்டத்தில் இன்று (3) ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி பி.பிரேமநாத் பணிப்புறக்கணிப்பும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் அழைப்பு விடுத்ததையடுத்து, இன்று காலை 10 மணிக்கு மட்டு. நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்தனர்.
இதில் நீதிதுறை சுதந்திரத்துக்காய் குரல் கொடுப்போம், சட்டத்தின் முன் யாவரும் சமம், நீதித்துறையை அச்சுறுத்தாதே, பாரபட்சமற்ற விசாரணை வேண்டும், சுதந்திரத்தில் தலையிடாதே போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால் சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றம், ஏறாவூர் சுற்றுவா நீதிமன்றம், களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றம், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் நீதவான் நீதிமன்றம், தொழிலாளர் நியாயசபை நீதிமன்றம் உட்பட 8 நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பால் அனைத்து நீதிமன்ற செயற்பாடுகளும் இன்று ஸ்தம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 8 மணி நேரம் முன்
