இனப் படுகொலைக்கு நீதி கோரிய அறவழிப் போராட்டம் - 12 ஆவது நாளை கடந்தது (படங்கள்)
இரண்டாம் இணைப்பு
ஈழத் தமிழினத்தின் மீதான இன அழிப்புக்கு நீதிகோரி ஐ.நா மனித உரிமை பேரவை நோக்கி இடம்பெற்றுவரும் மனிதநேய மிதிவண்டிப் பயணம் இன்று 12 ஆம் நாளை கடந்துள்ளது.
ஆரம்பித்த நாள் முதல் கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசியல் சந்திப்புக்களை மேற்கொண்டபடி பயணித்துவரும் இந்தக் குழு, நேற்று ஜெனிவா மனித உரிமை அமர்வு ஆரம்பித்த போது ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்திருந்தது.
இந்தப் போராட்டத்தின் போது தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இன அழிப்பிற்கு சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் மற்றும் மற்றும் இன அழிப்பின் சான்றுகள் தாங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த மனித நேயப் பயணம் நாளை பிரான்சில் சுவிஸ் எல்லையை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சிறிலங்காவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர் தாயகத்துக்கு நிரந்தர பாதுகாப்பு கோரியும் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிதிவண்டிப் பயணம் நேற்று 11ஆவது நாளை கடந்துள்ளது.
11ஆம் நாளாக பயணித்த குறித்த அறவழிப்போராட்டக் குழு, ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொண்டது.
ஐரோப்பாவின் மிக முக்கிய அரசியல் மையங்களில் ஒன்றான பிரான்சு சிறாசுபுர்க் மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆலோசனை அவை, ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப் போராட்டம் மேற்கொள்வோர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டமும் அரசியற் சந்திப்புக்களும் நேற்று (12) நடத்தப்பட்டது.
கைகளிலே சிறிலங்கா பேரினவாத சர்வாதிகார அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை (ICC) வேண்டும் எனும் கோரிக்கை மற்றும் இனவழிப்பின் சான்றுகள் தாங்கிய பதாகைகள் பிடிக்கப்பட்டிருந்தன.
சமவேளையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசனை அவை உறுப்பினர்கள் போன்றோரை சந்திக்கப்பட்டது.
51ஆவது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் (ICC), தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வு என்ற நிலைப்பாட்டினை நியாயமான முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையும் முன் வைக்கப்பட்டன.
