வடக்கு நோக்கி நகரும் சூறாவளி! வானிலை ஆய்வாளர் விடுத்த எச்சரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடைய கரையோர பகுதிகளில் நாளைமுதல் (28) காற்றினுடைய வேகம் சற்று அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று(27) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "வடக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை மழைவீழ்ச்சி கிடைப்பதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
தொடரும் கனமழை
தற்போது தொடரும் கனமழை நாளை(28) நண்பகல் நிறைவு பெற்றாலும் கூட இடையிடையே கனமழை முதல் மிக கனமழை திருகோணமலை மாவட்டத்திற்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.
எதிர்வரும் 30ஆம் திகதி அளவில் இந்த புயல் சென்னைக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கின்ற போது வடக்கு மாகாணத்தினுடைய யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கு சற்று வேகமான காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி கிடைப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
தொடர்ச்சியாக கிடைத்து வருகின்ற கனமழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தினுடைய பல தரை மேற்பரப்பு நீர்நிலைகள் அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அதன் மேலதிக நீர் வான் கதவுகளூடாகவும் வான் ஊடாகவும் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
எனவே மக்கள் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது அவர்களுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும்.
வடகீழ் பருவக்காற்று
வடகீழ் பருவக்காற்று கால பகுதியில் வங்காள விரிப்பாடு தாழமுக்கங்கள் ஏற்படுவது வழமையானது.
2024 ஆம் ஆண்டு கூறிய வடக்கு பருவப் பெயர்ச்சி காற்றின், கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வெளியிட்ட முன்னறிவிப்பில், இந்த ஆண்டு ஐந்துக்கு மேற்பட்ட தாழமுக்கங்கள் வங்காள விரிகுடாவில் ஏற்படும் என எதிர்வு கூறி இருந்தேன்.
அதன் அடிப்படையில் இது நான்காவது தாழமுக்கமாக இருக்கின்றது. இந்த தாழமுக்கம் ஒரு புயலாக மாறி இருக்கின்றது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிசா புயலுக்கு பிறகு ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய தாழமுக்க புயலாக இந்த பெங்கால் புயலை கூறலாம்.
கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய இயற்கை அனர்த்தத்தினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்கொண்டு உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |