வெள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம் - மேலும் இரண்டு மாணவர்கள் சடலமாக மீட்பு
புதிய இணைப்பு
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களில் மேலும் இரண்டு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, தற்போது காணமல் போன மாணவர்களில் நான்கு மாணவர்களில் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் மீட்டு பணிகளில் இராணுவம். விசேட அதிரடிப்படை, காவல்துறையினரும் பங்கேற்றுள்ளதுடன் தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்றாம் இணைப்பு
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மீட்கப்பட்ட சடலங்கள் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளன.
அம்பாறை மாவட்டம் காரைதீவு காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திம் வெள்ள நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு காணாமல் போயினர்.
பின்னர் கல்முனை பொதுமக்கள் மாளிகைக்காடு ஜனாஸா நலம்புரி அமைப்பினர் உட்பட கல்முனை கடற்படையினரின் உதவியுடன் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த மீட்புப்பணியின் போது அப்பகுதியில் உள்ள அதி வலு மின்கம்பத்தை பிடித்திருந்த மாணவர்கள் சிலரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
மேலும் இந்த விபத்தில் 06 சிறுவர்கள் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தற்போது காணாமல் போயுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
அம்பாறை (Ampara) மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெள்ளம் காரணமாக மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டு சென்ற சம்பவத்தில் அதில் பயணித்த 11மத்ரஸா மாணவர்களில் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஏனைய மாணவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை. குறித்த ஆறு மாணவர்களையும் தேடும் பணிகள் இன்று (27) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றன.
கடற்படையினருடன் இணைந்து சமுதாய தொண்டர் அமைப்புகளும் களத்தில் இணைந்து தேடும் பணிகள் தொடர்கின்றன.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பில் (Batticaloa) வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதில் ஏழு பேர் காணாமல் போயுள்ளனர்.
குறித்த விடயத்தை அம்பாறை (Ampara) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ரியாஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவமானது காரைத்தீவு மாவடிபள்ளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக சிகிச்சை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உழவு வண்டி ஒன்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதில் குறித்த ஏழு பேரும் காணாமல் போயியுள்ளனர்.
இதில், இரண்டு மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் காணாமல் போயுள்ளவர்களின் விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
மேலும், காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் திடீர் விஜயம் செய்துள்ளார்.
குறித்த விஜயமானது இன்று (26) இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, பிரதேச செயலக செயலாளரை சந்தித்து வெள்ள அனர்த்தம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
மேலும், வவுணதீவு பிரதேசத்தில் வெள்ள அனர்த்ததில் பாதிக்கப்ட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சீரற்ற கால நிலை காரணமாக மட்டக்களப்பில் வெள்ள நீரினால் ஒருவர் இழுத்து செல்லப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தினால் 161 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பல பிரதேசங்கள் வெள்ளகாடாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பட்டிப்பளை, காத்தான்குடி, கோரளைப்பற்று கிரான், மண்முனைவடக்கு, ஏறாவூர்பற்று செங்கலடி, பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 161 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளைவிட்டு வெளியேறி இவ்வாறு உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு
அதேவேளை வெள்ளத்தினால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்து மற்று வவுணதீவுக்கும் மட்டக்களப்பு நகருக்கும் இடையிலானதும் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெல்லாவெளிக்கும் மண்டூருக்குமான பிரதான அதாம்போதிக்கு மேலால் வீதியை மூடி 4 அடி உயரத்தில் வெள்ள நீரி பாய்து ஓடும் நிலையில் அதனை கடந்து செல்ல முற்பட்ட ஆண் ஒருவரை வெள்ள நீர் இழுத்து சென்று காணாமல் போயுள்ளார்.
மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை ஆகக்கூடிய மழைவீழ்சியாக வாகனேரியில் 139.0 மில்லிலீற்றரும் மட்டக்களப்பில் 103.4 மில்லி லீற்றருமாகவும் நேற்று செவ்வாய்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பகல் 11.30 மணிவரை மட்டக்களப்பில் 34 மில்லிலீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
வான் கதவுகள் திறப்பு
மாவட்டதிலுள்ள உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவு 10 உயரத்திலும் நவகிரிகுளம் றூகம்குளம், வாகனேரிகுளம், கட்டுமுறிவுகுளம், கித்துள்குளம், வெலியாகண்டிகுளம், வடமுனைகுளம், புனானைகுளம், ஆகிய குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அந்த அந்த குளங்களின் நீர் மட்டத்துக்கு ஏற்றவாறு அளவில் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேவேளை, மழையுடனான காற்றினால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஈச்சம்தீவு கன்னங்குடா பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அருகில் இருந்த மரம் ஒன்று கட்டித்தின் மீது முறிந்து வீழ்ந்ததால் கட்டிடம் பாதிக்கப்பட்டதுடன் மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.
அத்தோடு, மாவட்டத்தில் வீதிகளில் முறிந்து வீழ்ந்த மரங்களை மாநகரசபையின் தீயணைப்பு படையிளர் வெட்டி அகற்றிவருகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்துவருவதான் மக்களின் இயழ்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதுடன் உயர்தர மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலைகளுக்கு சென்று பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன் இன்னும் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி, மற்றும் மாவடிஓடை வண்ணாத்திஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் சிக்குண்டுள்ளார்கள் என மாவட்ட விவாசய அமைப்பின் தலைவர் ரமேஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் நிலைகள், குளம் மற்றும் ஆறு என்பவற்றை அண்டி வாழும் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாத் மாவட்ட ஊடகப் பிரிவின் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |