றீமால் புயல் வலுவடையும் : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மத்திய மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த தெற்கு வங்காள விரிகுடா பகுதியில் நேற்று முன்தினம் (23) தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டது.
இது நேற்றையதினம் (24) வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடா பகுதியில் புயலாக வலுப்பெற்றது.
இந்த புயலிற்கு “றீமால்” என்று பெயர் சூட்டப்பட்டதுடன் தற்போது குறித்த புயல் மத்திய கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது.
வங்காள விரிகுடா
இந்த நிலையில், றீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக இன்று (25) மாலை வலுப்பெறவுள்ளதாகவும் அதன் பின்னர், நாளை (26) நள்ளிரவு தீவிர புயலாக வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த மேற்கு வங்காள விரிகுடா கடற்கரையை கடக்கக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.
மேலும், இலங்கையைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் நிலவும் கடும் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் இதன் காரணமாக தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளிலுள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |