மிக்ஜாம் சூறாவளியின் தற்போதைய நிலை : மக்களுக்கு விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை!
வங்காள விரிகுடாப்பகுதியில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் சூறாவளியின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் (04) மேற்கு - மத்திய வங்காள விரிகுடாவின் மீது மையம் கொண்டிருந்த சூறாவளியானது இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 520 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது.
இது இன்று (05) காலை 11.30 மணியளவில் வடக்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காற்று
இதன் காரணமாக இன்றும் நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.
மேலும், பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, தென் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.