அரிசியை பதுக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து : வருகிறது சட்டத்தில் திருத்தம்
பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை பதுக்கி அதன் விலையை உயர்த்துவதை தடுக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் சிலர் செயற்கையாக உருவாக்க முயற்சிக்கும் அரிசி தட்டுப்பாடு, போதிய அளவு அரிசி கையிருப்பு இருந்தும், இந்த பண்டிகையின் போது அரிசியின் விலையை அதிகரிக்கும் சூழ்ச்சியாகும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
தற்போது அதிகாரம் இல்லை
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு ஆய்வு மற்றும் வழக்குத் தொடர அதிகாரம் உள்ளது, ஆனால் அதிக விலைக்கு விற்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களை மட்டுமே ஆய்வு செய்து வழக்குத் தொடர அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. அரிசி அல்லது பிற உணவுப் பொருட்களை மறைத்து வைக்கும் நபர்கள் மீது வழக்குத் தொடரவோ அல்லது அத்தகைய இடங்களை ஆய்வு செய்யவோ அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.
வழக்குத் தாக்கல் செய்வதற்கு
இதன்காரணமாக, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து தற்போது அரிசியை மறைத்து வைத்திருக்கும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கும் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான திருத்தங்களை நுகர்வோர் விவகார அமைச்சர் அடுத்த மாதத்திற்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பார் .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |