நூலிழையில் தப்பியது குறி - புடினின் கூட்டாளியின் மகள் குண்டுவெடிப்பில் பலி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியின் மகள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
29 வயதான தர்யா டுகினா மொஸ்கோவிற்கு வெளியே இடம்பெற்ற கார்க்குண்டு வெடிப்பில் உடல் சிதறி பலியானதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
"புடினின் மூளை" என்று அழைக்கப்படும் அவரது தந்தை ரஷ்ய தத்துவஞானி அலெக்சாண்டர் டுகின் தாக்குதலின் இலக்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
டுகின் ஒரு முக்கிய தீவிர தேசியவாத சித்தாந்தவாதி ஆவார், அவர் ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமானவர் என்று நம்பப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க திட்டம் தீட்டியவர்களில் முக்கியமானவர் இந்த அலெக்சாண்டர் டுகின். அதனாலேயே அவர் மீது குறிவைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஐரோப்பாவையே ரஷ்யா தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் காலம் வெகுதொலைவில் இல்லை என கூறி வருபவர் அலெக்சாண்டர் டுகின். மேலும் கிரிமியா மீதான தாக்குதலை அடுத்து புதிய ரஷ்யா என்ற திட்டத்தை முன்வைத்தவரும் இந்த அலெக்சாண்டர் டுகின் தான்.
உக்ரைனை தங்கள் கட்டுப்பாட்டில் ரஷ்யா கொண்டுவராவிட்டால் அது யூரேசியா முழுவதும் பெரும் ஆபத்தாக முடியும் என கூறி வருகிறார் அலெக்சாண்டர் டுகின்.

