ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி கண்ணீருடன் விடைபெற்றார் டேவிட் வோர்னர்
தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிய டேவிட் வோர்னர் பேட்டியின்போது திடீரென பேச முடியாமல் கண்ணீர் சிந்திய காட்சிகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்திருந்த டேவிட் வோர்னர் தனது துடுப்பாட்டத்தின் மூலம் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்ததாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நாள் கனவு நிஜமானதை போல் உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3-0 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளோம். கடந்த 18 மாதங்களில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த நாட்களாக அமைந்தது.
வெற்றிக்கு முக்கிய பங்கு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி, ஆஷஸ் தொடர் சமனிலை, உலகக்கோப்பை வெற்றி என்று மிகச்சிறந்த பயணமாக அமைந்துள்ளது. மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருக்கும் இடத்தில் நானும் இருந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
டெஸ்ட் தொடரின் வெற்றிக்கு வேகப்பந்துவீச்சாளர்கள் தான் காரணம். கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் அவர்களுடன் மிட்செல் மார்ஷ். அவர்கள் எந்தவித சோர்வும் இல்லாமல் வலைப்பயிற்சியிலும், உடற்பயிற்சி கூடத்தில் இருக்கிறார்கள்.
அதேபோல் பிசியோஸ், அணி நிர்வாகிகள் அனைவரும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்கள்.
ரசிகர்களுக்கு நன்றி
இன்று காலை காபி ஷாப் ஒன்றிற்கு சென்று காபி வாங்கி என் மகளுக்கு கொடுத்துவிட்டு, அதன்பின் காரில் ஏறினேன். அந்த நிமிடம் எனக்கு நிம்மதியாகவும் பெருமையாகவும் இருந்தது.
சொந்த மண்ணில் அவுஸ்திரேலிய அணிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவிற்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால், நாங்கள் இதனை செய்திருக்க முடியாது.
நாம் அனைவரும் பொழுதுபோக்கிற்கு விளையாடுகிறோம். அதனால் நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ, அப்படித் தான் கடைசி இனிங்ஸில் விளையாடினேன். எனது கிரிக்கெட் பயணத்தில் அனைத்து நேரங்களிலும் உடனிருந்தது என் மனைவி தான். அவர்களின் ஆதரவு இல்லாமல், நிச்சயம் எதையும் செய்திருக்க முடியாது. அதேபோல் என் பெற்றோருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
இறுதிப்போட்டியிலும் அரைசதம்
ஏனென்றால் அவர்கள் தான் நான் இங்கு நிற்பதற்கு காரணம். அதேபோல் என் சகோதரர் ஸ்டீவ்-ன் காலடி தடங்களை பின்பற்றி தான் கிரிக்கெட்டை தொடங்கினேன். அவருக்கு பின் மனைவி கேன்டிஸ் தான் அனைத்து தருணங்களிலும் உடனிருந்தவர். அவருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் கொண்டாட்டமாக இருந்துள்ளேன்.
அவர் தான் என் உலகம் என்று சொல்ல முடியும். அவுஸ்திரேலியஅணியில் உள்ள பலரும் 30 வயதை கடந்துவிட்டோம். அடுத்தடுத்து யாரும் மீண்டும் இளமையாக மாறப் போவதில்லை. ஆனால் ஒவ்வொருவரும் உலகத்தரம் வாய்ந்தவர்கள். எனது ஆட்டம் அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.
அடுத்து வரும் இளம் வீரர்கள் எனது காலடி தடங்களை பின்பற்றுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். இன்றைய இறுதிப்போட்டியிலும் அரைசதம் அடித்து கண்ணீருடன் விடைபெற்றார்.
கண்ணீருடன் விடைபெற்ற வோர்னர்
அவருக்கு பாகிஸ்தான் அணி சார்பில் கார்ட் ஆஃப் ஹானர் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் ரசிகர்களுக்கு நன்றி கூறிய அவர், மகள்களை கட்டியணைத்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சிட்னி மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஹெல்மெட்டை கழற்றி கைகளை உயர்த்தி அரங்கத்தை நோக்கி நடந்து சென்றார்.
அதன்பின் அரங்கத்தில் அருகில் இருந்த சிறுவன் ஒருவனுக்கு தனது தலைக்கவசம், கையுறைகளை கழற்றி பரிசாக அளித்தது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |