தயாசிறி வெளியிட்ட அறிவிப்பு கட்சிக்குள்ளேயே எழுந்தது எதிர்ப்பு
ஜே.வி.பி.யுடன் கூட்டணி அமைத்து இணைந்து செயற்பட முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) தெரிவித்திருப்பது கட்சியின் கருத்து அல்ல என கட்சியின் பொருளாளரும் இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவன்ன(Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தீர்மானங்களும் கட்சித் தலைமை, மத்திய குழு மற்றும் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கப்படுவதாகவும், ஜே.வி.பியுடன் கூட்டணி தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது மக்களின் பிரச்சினைகளுக்கு விடை காண்பதில் கட்சி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த அழகியவண்ண, கூட்டணி குறித்து ஆலோசிக்க இது சரியான தருணம் அல்ல என்றும் கூறினார்.
கம்பஹா, அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று (26) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்தார்.
நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்பொழுதும் தன்னால் இயன்றதைச் செய்யும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.