கடலில் தொடரும் அனர்த்தம் - உயிரிழக்கும் அரியவகை உயிரினங்கள்
புத்தளம் - முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடப்பு பிரதேச கடற்கரையோரத்தில் இறந்த நிலையில் கடல் ஆமையொன்று நேற்று கரையொதுங்கியுள்ளது.
ஆனைவிழுந்தான் வனவிலங்கு அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த அதிகாரிகளுக்குக் குறித்த ஆமையை மீட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.
குறித்த ஆமையின் நிறை 45 கிலோ மதிப்பிட்டதுடன் ஆமையின் உடல் மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக அதிகாரிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த சில மாதங்களில் மட்டும் புத்தளம் மாவட்டத்தில் ஆமைகளும், டொல்பின்களும் மற்றும் சுறா போன்றன இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அண்மையில் எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல தொன் நிறைகொண்ட இரசாயனம் கடல் நீரில் கலந்துள்ளமையால் தான் இவ்வாறு கடல் ஆமைகளும், மீன்களும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்தவண்ணம் உள்ளன.
எனினும், குறித்த கடல் ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதற்கான காரணங்களை கண்டறிய வனஜீவராசிகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


