காசா குழந்தைகள் நிதியத்திற்கு பங்களிப்பதற்கான வாய்ப்பு நிறைவு : வெளியான அறிவிப்பு
காசா குழந்தைகள் நிதியத்திற்கு (Gaza Children’s Fund) பங்களிப்பதற்கான வாய்ப்பு 31 ஜூலை 2024 அன்று முடிவடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
காசாவில் இராணுவ சூழ்நிலையால் இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு உதவி வழங்குவதற்காக குறித்த நிதியம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நிறுவப்பட்டது.
ரமழான் பண்டிகையின் போது ஜனாதிபதி இந்த நிதியத்திற்கான பங்களிப்புகளை கோரியதைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் சாதி, மத வேறுபாடின்றி பெருந்தொகையான மக்கள் தாராளமாக ஆதரவளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம்
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”மக்களின் தேவை காரணமாக, பங்களிப்பு காலம் 31 மே 2024 வரை நீடிக்கப்பட்டதுடன் அதிகாரபூர்வ முடிவு திகதி இருந்தபோதிலும், நன்கொடைகள் தொடர்ந்தும் பெறப்பட்டன.
இந்த நிலையில் குறித்த நிதியத்திற்கு மேலும் பணம் வரவு வைக்க வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
2024 ஜூலை 31க்குப் பிறகு ஜனாதிபதியின் அலுவலகத்தின் அதிகாரபூர்வ வங்கிக் கணக்கில் நேரடியாகச் செய்யப்படும் எந்தவொரு பண வைப்பும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ஜனாதிபதியின் நிதிக்கு திருப்பி விடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிப்பு
முதற்கட்டமாக, ஜனாதிபதி ரணில், ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக பலஸ்தீன அரசாங்கத்திடம் இப்தார் கொண்டாட்டத்திற்காக முதலில் உத்தேசிக்கப்பட்ட அமைச்சு மற்றும் அரசாங்க நிறுவன ஒதுக்கீடுகளிலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை கையளித்தார்.
இதேவேளை 2024 ஜூலை 31க்குள் பெறப்பட்ட அனைத்து நன்கொடைகளும் அவ்வாறே வழங்கப்படும்.
இந்த நிதியத்திற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி அலுவலகம் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |