அடுத்த வாரம் முதல் இலங்கையர்களுக்கு புதிய இறப்புச் சான்றிதழ்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, தயாரிக்கப்படும் புதிய இறப்புச் சான்றிதழ் அடுத்த வாரம் முதல் இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அகில இலங்கை திடீர் மரண பரிசோதகர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
உள்ளடக்கப்படவுள்ள விடயங்கள்

சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, பதிவாளர் நாயகத் திணைக்களம் மற்றும் மரண பரிசோதகர்கள் சங்கம் ஆகியன இணைந்து புதிய இறப்புச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இதன்படி, புதிய இறப்புச் சான்றிதழ் 12 பிரதான விடயங்கள் மற்றும் 24 உப விடயங்களை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம், இயற்கை மரணமா இல்லையா என்பனவே இதுவரை வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புதிய இறப்புச் சான்றிதழில் உயிரிழந்த நபர் மற்றும் மரணத்திற்கான காரணம் தொடர்பில் குறிப்பிட வேண்டும் என்பதுடன் அவை மரண விசாரணை அதிகாரிகளால் இறப்புச் சான்றிதழ்களில் பதிவிடப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மரணத்திற்கான காரணத்தை நான்கு விடயங்களின் கீழ் விரிவாகக் குறிப்பிட வேண்டும் எனவும், உயிரிழப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இருந்து இடம்பெறும் அனைத்து மரணப் பரிசோதனைகளையும் புதிய இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.