முன்னாள் காவல்துறை மா அதிபரின் மர்ம மரணம்! 10-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (17) காலை மாலம்பே, தலாஹேன பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
இவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை பலப்படுத்தி உள்ளனர்.
சி.டி. விக்கிரமரத்ன மரணம்
அந்த வகையில் தற்போது முதல்கட்ட விசாரணையில் முன்னாள் காவல்துறை மா அதிபர் தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பரிசோதிப்பதாக குறிப்பிட்டு துப்பாக்கியை அவரிடமிருந்து வாங்கி, அதைக் கொண்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதால், காவல்துறையின் ஒழுக்கக் கோவைக்கு இணங்க அவருக்கு உத்தியோகபூர்வ மரியாதைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட சம்பவத்தின்போது வீட்டில் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபரின் மனைவியும் இளைய மகனும் இருந்துள்ளனர்.
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் முறையான மற்றும் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய விசேட உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவிற்கமைய மேல் மாகாண தெற்கு விசேட விசாரணைப் பிரிவும், மாலம்பே காவல்துறையும் தனித்தனியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை (20) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening