கிராமம் ஒன்றையே தனிமைப்படுத்திய கொவிட் மரணம்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் அடக்கம் செய்வதற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சில மணித்தியாலங்களின் பின்னர் வைத்தியசாலை அதிகாரிகள் வீட்டிற்கு வந்து பெண்ணுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சடலத்தை எடுத்துச் சென்ற நிலையில் மரணச்சட்ங்கில் கலந்து கொண்ட அத்தனைபேரும் திமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
புத்தல, ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மினிபுரகம பிரதேசத்தில் வசிக்கும் 77 வயதுடைய பெண் ஒருவர் மொனராகலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அண்மையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் வைத்தியசாலையில் இருந்து உறவினர்களிடம் தகனம் செய்வதற்காக விடுவிக்கப்பட்டதுடன், சடலம் இறுதிச் சடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சில மணிநேரங்களின் பின்னர், வைத்தியசாலை அதிகாரிகள் குறித்த பெண்ணுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட விதிகளின்படி சடலத்தை வீட்டிலிருந்து எடுத்துச் சென்று அடக்கம் செய்ய சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நேரத்தில் குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர், ஏற்கனவே இருநூறுக்கும் மேற்பட்டோர் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து மரண இல்லத்தில் இருந்தவர்களை தனிமைப்படுத்த சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இச்சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.