யாழ்.பல்கலைக்கழக மாணவன் மரணம் : பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணம், நீர்வேலியில் நேற்று (21) விபத்தில் சிக்கி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவன், வீடொன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பியபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
அச்சுவேலி காவல்துறை பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நேற்று அதிகாலை நாய் குறுக்காக ஓடியதால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார்.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் (22) என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.
மர்மமான மாணவனின் மரணம்
மாணவன் உயிரிழந்த விவகாரம் மர்மமாக இருந்த நிலையில், மானிப்பாயை சேர்ந்த மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து, விபத்தில் சிக்கியவர் என்பது தெரியவந்தது.
இதேவேளை வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடுப்பிட்டியில் உள்ள வீடொன்றில் தாக்குதல் முயற்சி நடந்தது.இது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியபோது, குறித்த வீட்டிற்குள் நுழைந்து துடுப்பு மட்டையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி, வானுக்கு தீ வைத்து விட்டு திரும்பி வரும் போதே பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
உடுப்பிட்டியில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல்
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனும் காயமடைந்தவரும் இணைந்து வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு விட்டு திரும்பி வரும் போது நீர்வேலியில் விபத்தில் சிக்கினர்.
விபத்தை தொடர்ந்து, நண்பரொருவருக்கு அறிவித்து அவர் மூலம் சம்பவத்தை மறைக்க அந்த இடத்தை சுத்தம் செய்து, தடயங்களை அழிக்க முற்பட்டதுடன், காயமடைந்தவரை நோயாளர் காவு வண்டியில் ஏற்றியனுப்பியுள்ளனர்.
அத்துடன், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றையவர், மோட்டார் சைக்கிளை மறைத்து வைத்து விட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
ஒரு தலைக்காதல் விவகாரத்தினால் இந்த வன்முறை தாக்குதல் நடத்ததாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து தடயத்தை அழிக்க முற்பட்டவரையும் வைத்தியசாலையில் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள இருவரிடமும் அச்சுவேலி மற்றும் வல்வெட்டித்துறை காவல்துறையினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |