மொட்டு கட்சிக்கு பெரும் பலமாக இருந்த சனத் நிஷாந்த : கவலை வெளியிட்டுள்ள பிரசன்ன ரணதுங்க
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், புத்தள மாவட்ட மக்களுக்கும் பாரிய இழப்பு என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சனத் நிஷாந்த புத்தளம் மற்றும் சிலாபம் மாவட்ட மக்களுக்காக உழைத்தவர் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
புத்தளம் மற்றும் சிலாபத்தில் இடம்பெற்ற இரு நிகழ்வுகளில் கலந்து கொண்டு கொழும்பு செல்லும் வழியில் அவர் இந்த விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
சனத் நிஷாந்தவின் வீடு
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டத்தின் போது புத்தளத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லம் எரிக்கப்பட்டது.
எனவே, புத்தளத்தில் ஓய்வெடுக்க வீடு இல்லாத காரணத்தால் சனத் நிஷாந்த அங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர் கொழும்புக்கு திரும்பியதாகவும், இதன் போது விபத்துக்குள்ளானதாகவும் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இராஜாங்க அமைச்சரின் சாரதி இந்த விபத்து ஏற்பட்ட போது, மது போதையில் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் பலம்
இதேவேளை, சனத் நிஷாந்த கட்சிக்கும் மாவட்டத்திற்கும் பெரும் பலமாக திகழ்ந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ச மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சரின் இழப்பை யாராலும் நிரப்ப முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |