இலங்கை இளைஞருக்கு சவுதியில் மரண தண்டனை : ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பில் தென்கயிலை ஆதீனத்தின் தலைவர் தவத்திரு அகத்தியர் அடிகளார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதன்படி, ஜனாதிபதி தன்னுடைய முழு பிரயத்தனத்தையும் பயன்படுத்தி அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியில் சவுதி மன்னர் ஊடாக பொது மன்னிப்பை வழங்க வைத்து நாட்டுக்கு அழைத்து வர வழிவகை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் சிவராசா அனோஜனின் உயிரை காப்பதற்கு அனைத்து தரப்புக்களும் எடுத்து வரும் முயற்சிகள் மனதை ஆறுதல்படுத்துகின்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர் முயற்சிகளை மேற்கொள்ளுதல்
இந்த விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வினையாக பதிந்த மத நிந்தனை முகப்புத்தக பதிவு இந்த பாரதூரமான உயிரை பறிக்கும் தண்டனை வரை வந்து நிற்பது மனதை மிகவும் வருத்துகின்றது
அவரது உயிரைக் காப்பதிலும் பெற்றோரின் கண்ணீரை துடைப்பதிலும் இலங்கை அரசும் அதேநேரம் சகோதர எம் நாட்டு இஸ்லாமிய ஆன்மீக அரசியல் பிரதிநிதிகளும் எடுத்து வரும் அதீத முயற்சிகள் மிகவும் நன்றிக்குரியவை. அதே போல தமிழ் பிரதிநிதிகள் கொடுத்து வரும் உச்சபட்ச அழுத்தமும் பாராட்டத்தக்கது.

நாம் அனைவரும் எம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து சகோதர உணர்வோடு இந்த இளைஞனின் உயிரை காப்பதற்கு அவர் விடுதலையாகும் வரை எம் தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் மிகுந்த சகிப்புத்தன்மையுடன் அனைத்து மக்களும் சகோதரத்துவ உணர்வோடு தங்கள் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என வினயமாக வேணடுகின்றோம். அனைத்து தரப்பினருடன் இந்த இளைஞனுக்காக அவனது விடுதலைக்காக மனமுருகி நாமும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |