தேசபந்துவுக்கு எதிராக கூடுகிறது நாடாளுமன்றம்! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை (Deshabandhu Tennakoon) பதவி நீக்கம் செய்யும் பிரேரணை மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை (5) நடைபெறும் போது, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பில் (Colombo) தங்கியிருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் பிரேரணை மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை (5) நடைபெறவுள்ள நிலையில் அன்று பிற்பகல் வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையியற் கட்டளைகளின்படி, இந்தப் பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு, மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் அரைவாசிப் பேரான 113 பேர் போதுமானவர்கள்.
ஜனாதிபதியின் பரிந்துரை
நாடாளுமன்றத்தின் அமைப்பைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரேரணை நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால், சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பார் எனவும் அத்தகைய அறிவிப்புக்குப் பிறகு, ஜனாதிபதி அரசியலமைப்புச் சபைக்கு காவல்துறைமா அதிபர் பதவிக்கான பரிந்துரையை பரிந்துரைப்பார்.
இந்த நாட்டில் ஒரு காவல்துறைமா அதிபர் நாடாளுமன்றத் தீர்மானத்தால் பதவி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை தேசபந்து தென்னகோனுக்கு எதிரான தவறான நடத்தை குற்றச்சாட்டுகளை விசாரித்த மூன்று பேர் கொண்ட நாடாளுமன்றக் குழு, அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளி என்று அறிவித்து, அவரை சேவையிலிருந்து நீக்க பரிந்துரைக்கிறது.
ஆதரவாக வாக்களிக்கவுள்ள கட்சிகள்
தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் பிரேரணை நாளை மறுதினம் (4) நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்படும். இது தற்போது நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளது.
ஐந்து முழு நாட்களுக்கு ஒழுங்குப் புத்தகத்தில் இந்தப் பிரேரணை வைக்கப்பட்ட பிறகு எந்த நாளிலும் அதைப் பற்றி விவாதிக்கலாம் என்று நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் கூறுகின்றன.
தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் பிரேரணைக்கு ஆதரவாக மூன்று முக்கிய கட்சிகள் ஏற்கனவே வாக்களிக்க முடிவு செய்துள்ளன. அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவையே அந்தக் கட்சிகள் ஆகும்.
அத்துடன் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் பிரேரணை மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த நாடாளுமன்றத் தலைவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
