ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
ஜோர்தானில் வேலையிழந்த ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களான இலங்கையர்கள் மீது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கவனம் செலுத்தியுள்ளார்.
இதன்படி, தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகமும் அதன் தொழிலாளர் நலப் பிரிவும் சம்பந்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அநீதி தொடர்பாக ஜோர்தானில் உள்ள தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை
இந்த தொழிலாளர்களை இலங்கைக்கு அனுப்ப விமான டிக்கெட்டுகளை வழங்க முடியும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இலங்கைத் தூதரகமும் அதன் தொழிலாளர் நலப் பிரிவும் அதில் திருப்தி அடையவில்லை.
பின்னர் இந்தியா மற்றும் பங்களாதேஷைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜோர்தானில் உள்ள தூதுவர்களுடன் சேர்ந்து, அந்த நாட்டில் உள்ள தொழிலாளர் அமைச்சு அதிகாரிகளை சமூக காப்பீட்டு நிதியத்தின் மூலம் இழப்பீடு வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் சமூக பாதுகாப்பு இழப்பீடு ஆகியவற்றின் நிலுவைத் தொகையைப் பெறுவதற்கு ஜோர்தானிய சட்ட ஆலோசனை நிறுவனத்திற்கு உதவுமாறு பணியகத்தின் தலைவர், ஏ.எம். ஹில்மி , தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அத்துடன், தற்போது ஜோர்தானில் செல்லுபடியான வீசா இன்றி தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாமல் நாட்டுக்கு அழைத்து வருமாறும், தங்கியிருக்க விரும்பும் 62 இலங்கையர்களுக்கு புதிய பணியிடங்களை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
220 இலங்கைத் தொழிலாளர்கள்
தற்போது, சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தூதரகத்தின் கோரிக்கைகளுக்கு பதில் கிடைத்ததையடுத்து, இம்மாதத்திற்குள் இந்த தொழிலாளர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜோர்தானில் உள்ள ஒரு நிறுவனத்தில் 153 இலங்கைத் தொழிலாளர்களும் மற்றைய ஆடைத் தொழிற்சாலையில் 67 தொழிலாளர்களும் பணிபுரிந்தனர்.
இதேவேளை, குறித்த நிறுவனமொன்றில் பணியாற்றிய இலங்கைத் தொழிலாளர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், உணவு, தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை தட்டுப்பாடு இன்றி பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நிதியுதவி
இந்த இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும் உள்ள இலங்கைப் பணியாளர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான நிதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அனுப்பி வைத்துள்ளது.
தொழிலாளர் நலத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை அவதானித்து வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடுகிறது.
இவ் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் மூன்று சட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடப்பட்டு, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னர், ஊழியர்களின் சம்மதத்துடன் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கைப் பணியாளர்கள் நாடு திரும்பவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |