ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இலங்கையர்கள் : பயங்கரவாதிகளாக கருதப்படலாம் என எச்சரிக்கை
சட்ட விரோதமான முறையில் ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இரு இலங்கையர்கள் மீண்டும் ஜோர்தானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இதனை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வரும் பின்னணியில், குறித்த தரப்பினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள்
ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு சட்ட விரோதமான முறையில் குடிபெயர்ந்த இரு இலங்கை பெண்கள் இஸ்ரேல் சட்ட இயக்குனரக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜோர்தானிடம் ஒப்படைக்கப்பட்ட இலங்கையர்கள்
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் மீண்டும் ஜோர்தானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் எல்லையை கடந்து வேறு நாட்டுக்கு செல்வது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டெனவும் அது தவறான நடத்தை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்கள் பயங்கரவாதிகள்
யுத்த சூழ்நிலையில் நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்லும் தரப்பினர் பயங்கரவாதிகளாக கருதப்படும் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், இஸ்ரேல் போன்ற நாடுகளில் சட்ட விரோதமான முறையில் புலம்பெயர்ந்து, அந்த நாட்டு சட்ட இயக்குனரக அதிகாரிகளால் கைது செய்யப்படுவபர்களுக்காக யாரும் முன்னிலையாக மாட்டார்கள் எனவும் காமினி செனரத் யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சட்ட விரோதமான முறையில் எல்லை தாண்டும் இலங்கையர்கள் தொடர்பில் சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்த வகையிலும் தலையிடாது எனவும் பொறுப்பேற்காது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.