சிறிலங்கா இராணுவம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிமுக்கிய தீர்மானம்!
2030 ஆம் ஆண்டளவில் சிறிலங்கா இராணுவத்தின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய, சிறிலங்கா இராணுவத்தின் பணியாளர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் 2030ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தினரின் எண்ணிக்கையை சுமார் 100,000 ஆக குறைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தை மீளாய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் குழுவொன்றையும் சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொள்கை ரீதியான தீர்மானம்
இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை சுமார் ஒரு இலட்சமாக குறைத்து இராணுவத்தை தொழில்நுட்ப மற்றும் தந்திரோபாய இராணுவமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பதும் இலக்கு என அமைச்சர் தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.