மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் : சிறிலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் நீதித்துறைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கலங்கத்தை, சிறிலங்கா அரசாங்கம் கட்டுப்படுத்த தவறின், மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையை சுயாதீனமாகச் செயற்பட வைக்கும் கடமை சிறிலங்கா அரசாங்கத்திற்கு காணப்படுவதாகவும், நீதிபதி விவகாரத்தில் முறையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
நேற்று(30) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சி.வி. விக்னேஸ்வரன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும் என்பது ஒரு அரசாங்கத்தினுடைய கடமையாக காணப்படுகின்றது.
நீதித்துறைக்கு பங்கம் ஏற்படும் விதத்திலே, நீதியை நடைமுறைப்படுத்தும் நீதித்துறைக்கு பங்கம் ஏற்படும் விதத்திலே யாராவது நடந்து கொண்டால் உடனடியாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர நீதிபதிக்கு தொல்லைகள் கொடுக்கக் கூடாது.
ஆனால் இலங்கையில் நடைபெறுவது இவ்வாறான செயற்பாடுகள் அல்ல. எல்லாமே ஒரு சிங்கள பௌத்த சிந்தனையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன” என்றார்.